உயிரோடு இருப்பவர் இறந்தவர் பட்டியலில் - ஆட்சியரிடம் பெண் புகார் மனு

உயிரோடு இருப்பவர் இறந்தவர் பட்டியலில் - ஆட்சியரிடம் பெண் புகார் மனு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்சவள்ளி (55). இவருடைய கணவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவரது மகன் மற்றும் இவருடைய பெயர் குடும்ப அட்டையில் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நியாய விலை கடையில் பொருள் வாங்க சென்ற பொழுது, அம்சவள்ளியின் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அம்சவள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட பொழுது அம்சவள்ளியின் பெயர் இறந்தோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். உயிருடன் இருக்கும் அம்சவள்ளியை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏற்கனவே கணவர் இறந்த நிலையில், தன்னுடைய மகனும் குடிக்கு அடிமையானதால் நியாய விலை கடைக்கு கைரேகை வைக்க கூட வருவதில்லை என்றும், வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லாத நிலையில், தன்னை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டதால் ரேஷன் கடையில் கிடைக்கும் பொருட்களும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் அம்சவள்ளி, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, அம்சவள்ளியின் பெயரை இறந்தவர்களின் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உயிருடன் இருக்கும் ஒருவரை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO