செவிலியர் பயிற்சி மாணவர்கள் பங்கேற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

செவிலியர் பயிற்சி மாணவர்கள் பங்கேற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சியில் உலகமக்கள் தொகை தினத்தையொட்டி 300க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். உலக மக்கள் தொகையானது 800 கோடியை தாண்டிவிட்டது. இந்திய மக்கள் தொகை 135.4 கோடியாகும், தமிழகத்தில் 8 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.

பெருகிவரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், 'தாய்சேய் நலத்தின் பாதுகாப்பு திட்டமிட்ட குடும்பத்தின் பொறுப்பு' என்ற மையக்கருத்தினைக் கொண்டு பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜுலை 11ம் நாள் உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்துக்கொண்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இப்பேரணியானது மத்திய பேருந்துநிலையம் வழியாக கி.ஆ.பெ அரசு மருத்துவக்கல்லூரியைச் சென்றடைந்தது. பேரணியில் மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர்.

முன்னதாக நாடு வல்லரசாகவும், நமது தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ளவும், பொருளாதார மேம்பாட்டிற்காக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும் பொதுமக்களிடத்தில் இதுகுறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதுடன், உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணியையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO