அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!!
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் 600 படுக்கைகள் உள்ள நிலையில் அது தற்போது 1000 மாக உயர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் அதிகரிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரிசோதனையானது தமிழகம் முழுவதும் 16 லட்சத்து 54 ஆயிரம் சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 45,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அனைத்து உயிர் காக்கும் மருந்துகளும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, அலோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவ முறைகளையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இறப்பு வீதமானது குறைந்து வருகிறது. கொரோணா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை தேவை.கொரோனா பாதிக்கப்பட்டவர் நமக்கு எதிரி அல்ல. ஆனால் கொரோனா வைரஸ் நமக்கு எதிரி.எனவே தொற்று பாதிக்கப்பட்டவரை அன்புடன் நடத்த வேண்டும். இந்திய அளவில் பிளாஸ்மா பரிசோதனை செய்வதற்கு 44 பரிசோதனை மையங்கள் அமைக்க ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மண்டல அளவில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நாளொன்றுக்கு நான்கு முதல் 60 லிட்டர் வரையிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது எனவே தேவையை கருத்தில் கொண்டு தற்போது High Flow nasal oxygen சிலிண்டர் புதிதாக அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனாவிற்கு உலக அளவில் பல்வேறு நாடுகளில் மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தகவல் வருகின்றன. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
மருத்துவ குழுவின் ஆலோசனைப்படியே தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பலன் கிடைத்து வருகிறது என தெரிவித்தார்.