திருச்சி கோட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்ட 100 க்கும் மேற்பட்ட வடமாநில வியாபாரிகள் கைது!!
Advertisement
தமிழகம் முழுவதும் சகோதரத்துடன் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து மக்கள் மத்தியில் வெறுப்பு பிரச்சாரம் செய்து, தமிழகத்தில் ஜாதி, மத கலவரங்களை உண்டாக்கிட பாஜக திட்டமிட்டு செயல்படுவதாகவும் இதற்கு மார்வாடி எனப்படும் வடமாநிலத்தவர்கள் பொருளாதார உதவி செய்து வருவதாக குற்றம் சாட்டி நாளை மறுதினம் (8.02.2021) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திருச்சி கம்மாளர் வீதியில் உள்ள அனைத்து மார்வாடி கடைகளை மூடக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கட்சியினர் துண்டு பிரசுரங்களை இன்று காலையில் வினியோகித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் வட மாநிலத்தை சேர்ந்த உரிமையாளர்கள் திருச்சி கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, துண்டு பிரசுரங்களை விநியோகித்த தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோட்டை காவல் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர்கள்,பவன் குமார் ரெட்டி, வேதத்தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தற்போது சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பிஜேபியினரை போலீசார் கைது செய்தனர்.