திருச்சி மகளிர் காவல் நிலையத்தில் மகளுக்கு கட்டிய தாலியயை அறுத்த தாய் - பரபரப்பு
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லான்குளம் நாயக்கர் தெருவில் வசித்து வரும் கிருஷ்ணன் - ஜோதி தம்பதியினரின் மகன் மணிகண்டன் (23). அந்த பகுதியில் டெம்போ டிரைவராக பணியாற்றி வருகிறார். எடமலைப்பட்டிபுதூர் நல்லகேணி தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்- தனலட்சுமி தம்பதியினரின் மகள் நித்யா (19). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ் சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் மணிகண்டன் மற்றும் நித்யா இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நித்யாவின் பெற்றோர்கள் அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்த நிலையில் காதல் ஜோடி நேற்று வீட்டை விட்டு வெளியேறினர்.
பின்னர் கரூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு இன்று திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாத நித்யாவின் தாயார் ஆவேசம் அடைந்து போலீஸ் நிலையத்தில் நுழைந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி எறிந்தார்.
உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மணிகண்டன் தனது காதலியின் கழுத்தில் மீண்டும் தாலி கட்டினார். காதல் திருமணம் செய்த மகளின் தாலியை காவல்நிலையத்திலேய தாய் அறுத்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm