பல்பரிமாண எழுத்தாளர், பொறியாளர் சுஜாதா நினைவு நாள்: சுஜாதாவும் திருச்சியும்!!

பல்பரிமாண எழுத்தாளர், பொறியாளர் சுஜாதா நினைவு நாள்: சுஜாதாவும் திருச்சியும்!!

“ஞாயிறன்று திருச்சியில் இருந்தேன். க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பேருந்துகள் நாலு ரூபாய்க்குப் போட்டி போட்டுக்கொண்டு பின்னால் வரும் பேருந்துக்கு எதுவும் மிச்சம் வைக்காமல் அள்ளிக்கொண்டு போகிறார்கள். விரல் இடுக்கில் தர்பையை இடுக்குவது போல பத்து ரூபாய் நோட்டுக்களை இடுக்கிக்கொண்டு எல்லாக் கண்டக்டர்களும் விசில் அடிக்கிறார்கள்.பெரியாஸ்பத்திரிப் பக்கம் போகும் போது அதே ஃபினாயில் வாசனை வருகிறது. தில்லைநகர் சாலைகள் பெரிதாகியிருக்கின்றன. பல இடங்களில் இருந்த ஐயங்கார் பேக்கரிகள்’ ஐயங்கார் கேக் ஷாப்’  என்று ஸ்ரீரங்கம் முதல் திருவரம்பூர் வரை மாறியுள்ளன. கூடவே பக்கத்தில் ஒரு பழமுதிர் சோலையும், பத்மா காபியும்.புத்தூர் நாலு ரோட்டில் ‘குப்பை போடாதீர்கள்’ என்ற அறிவிப்புப் பலகை ஆங்கிலத்திலும், சாக்லேட் ஐஸ்கிரீம் கடைப் பெயர் தமிழிலும் இருக்கிறது. சிந்தாமணி – சிந்தாமணி மால் ஆகிவிட்டது! மாரிஸ் தியேட்டர் உள்ளே இருந்த இருக்கைகள் எல்லாம் வெளியே வந்துவிட்டன. ரமா கபேயில் அவர்களே இலையை எடுத்துவிடுகிறார்கள்”.இவை யாவும் திருச்சியை மனதிலிருந்து அகற்ற முடியாதவர்களுக்கு சுஜாதாவின் தேன்வாசகங்கள்.

சுஜாதா (இயற்பெயர் எஸ். ரங்கராஜன்) மே 3, 1935ல் திருவல்லிக்கேணி, சென்னையில் பிறந்தார். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். இந்த கல்லூரியில்  அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார்.அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

Advertisement

மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.இவருடைய, “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, ‘சுஜாதா’வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார். சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.

சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார். நேரு நினைவு கல்லூரியில்  கணினி ஆய்வகம் திறந்து வைத்தார். பின்னாலில் தனது கட்டுரைகளில்  புத்தனாம்பட்டி கருப்பாயியும் கணினி பயிக்கிறாள் என்று எழுதினார்.

ஆரம்பகால இவரது சிறுகதை முயற்சிகள் இன்றும் பிரமிப்பூட்டுபவை. வேறுபட்ட கருக்கள், வேறுபட்ட அணுகுமுறைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை சிக்கலான மருத்துவ, விஞ்ஞான,தொழில்நுட்ப,கணணி விடயங்களையும் மிக எளிமையான எடுத்துக்காட்டுக்களோடு பாமரரும் விளங்கும் வகையில் தமிழில் தந்தவர்.
பிப்ரவரி 27, 2008 தனது 72வது அகவை சென்னையில் இவுலகை விட்டு பிரிந்தார்.

✒இரமேஷ்,
(உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி)

.