பணி தொடரும் அரசாணையை வழங்கிட பிரதிநிதிகளோடு அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு
![பணி தொடரும் அரசாணையை வழங்கிட பிரதிநிதிகளோடு அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு](https://trichyvision.com/uploads/images/202501/image_870x_6799cf202a3bc.jpg)
சமிக்ர சக்ஷ அபியான் திட்டத்தின் மூலம் நம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்விக்காக நிதியை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக சிரமங்களுக்கிடையிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதியும், கிடைத்திட்ட ஊதியத்தைப் பெற்றுக் கொண்டும், தொழிற்கல்வி பயிற்றுநர்களாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 235 பெண் மற்றும் 216 ஆண் என மொத்தம் 451 தொழிற்கல்வி பயிற்றுநர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.
ஒன்றிய அரசிடமிருந்து நிதி வராததால் வேலை இழப்பிற்கு ஆளாகி விடை தெரியாமல் வழி தெரியாமல் சிரமத்தில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளாக சிலர் நேற்று (28.01.2025) என்னைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அதில், கடந்த 2024 மார்ச் மாதம் 13ஆம் தேதி மாநில திட்ட இயக்குனர், 25 மார்ச் 2024 உடன் தொழில்கல்வி பயிற்றுநர்கள் பள்ளி செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், 25 மார்ச் 2024க்கு பிறகு எந்த ஒரு பள்ளி சார்ந்த வேலைகளிலும் ஈடுபடக்கூடாது எனவும், 2024 ஏப்ரல் மாதம் முதல் பணி நீட்டிப்பு ஆணை வழங்கும் வரை பணி மற்றும் ஊதியம் இல்லை எனவும் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டினர்.
கடந்த ஐந்து வருடங்களாக 12 மாதமும் ஊதியம் என்ற அடிப்படையில் பணியாற்றி வந்த அவர்களுக்கு தற்பொழுது 2024 ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்படாததால் பணி மற்றும் ஊதியம் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கல்வி ஆண்டில் அவர்களுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்படாததால் பள்ளிகளில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி, தொழில் கூடம் பார்வையிடல், சிறப்பு விரிவுரையாளர் மூலம் பயிற்சி வழங்குதல் மற்றும் வேலை வாய்ப்பு திறன்கள் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டு மாணவர்களுடைய கற்றல் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே அவர்களுக்கான பணி நீட்டிப்பு ஆணையை பெற்று வழங்கிடுமாறும், மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய கல்வி தடையை நிவர்த்தி செய்யுமாறும் கேட்டு என்னைச் சந்தித்தனர். அவர்களின் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்த நான் அவர்களை அழைத்துக் கொண்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சகோதரர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து இந்த கோரிக்கையை எடுத்து வைத்தேன்.
அப்போது அமைச்சரிடம் நான், இந்த 451 பேருக்கான ஆண்டு ஊதியம் மொத்தம் 13 கோடி ரூபாய் ஆகும். இந்தத் தொகையால் தமிழ்நாடு அரசுக்கு பெரிய நிதிச் சுமை ஏற்படப்போவதில்லை என்பதினால், இந்த 451 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், மாணவர்களின் கல்வி தடையை நீக்கவும் தமிழ்நாடு அரசே இந்த நிதிச்சுமையை ஏற்று, அவர்களுக்கு உண்டான பணி தொடரும் அரசு ஆணையை வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொண்டேன். பரிசீலித்து ஆவன செய்வதாக அமைச்சர் பதில் அளித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision