ப்ளஸ் 2 ரிசல்ட் - திருச்சி 13வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு முன்னேற்றம்! ஆட்சியர் பேட்டி
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 95.94% தேர்ச்சி விகிதம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி ஆட்சியர் சிவராசு பேட்டியளிக்கையில்… பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருச்சியானது மாநில அளவில் 13 வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்கு அரசு பள்ளிகளின் 2.4 சதவீத தேர்ச்சி மிக முக்கிய காரணம். திருச்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில அளவில் அரசு பள்ளிகளில் திருச்சியில் 92.75 % பெற்று திருச்சி மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. திருச்சியில் உள்ள அரசு, தனியார், உதவிபெறும் பள்ளி ஆகிய அனைத்தையும் சேர்த்து 250 பள்ளிகளில் 82 பள்ளிகள் 100% சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன என்றார்.
மேலும் பேசிய ஆட்சியர் அடுத்த ஆண்டு 3 வது இடத்திற்கு வருவதற்கு முயற்சி எடுத்துள்ளதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.