வீட்டின் மேற்கூரை அமைக்க கூடாது என காவல்துறை கெடுபிடி மனமுடைந்த ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி
திருச்சி பெரிய மிளகுபாறை காமராஜ மன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தியாகப்பர். இவர் தந்தை லூயில்ராஜ், தாய் மரியலில்லி, மனைவி ஜானகியுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். மேலும் சந்தியாகப்பர் வீட்டை ஒட்டி அவரது அத்தை ( தந்தையின் சகோதரி ) மார்க்ரேட் வசித்து வருகிறார்.
இதனையடுத்து சந்தியாகப்பர் வசித்து வரும் வீடு தனக்கு சொந்தமானது என்று மார்க்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சந்தியாகப்பர் வீட்டின் மேற்கூரை காய்ந்து ஓட்டை விழுந்துள்ளதால் நேற்று முன்தினம் பெய்த மழையால் பெரும் அவதி அடைந்ததால் இன்று மேற்கூரையை அகற்றிவிட்டு தகர கூரை அமைக்க முயன்றார்.
மேற்கூரை அமைக்க கூடாது என்று மார்க்ரேட் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். பின்னர் விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து தந்தை, தாய், மனைவி, குழந்தையுடன் கண்டோன்மெண்ட் காவல் நிலையம் வந்த சந்தியாகப்பர் காவல் ஆய்வாளரிடம் அங்கு நடந்தவற்றை கூறினார்.
ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருப்பதால் வீட்டில் பராமரிப்பு செய்ய கூடாது என்று காவல் ஆய்வாளர் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தினருடன் கண்டோன்மெண்ட் காவல் நிலையம் முன்பு தீ குளிக்க முயற்சி செய்தார். பின்னர் அங்கிருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.
இதனையடுத்து தீ குளிக்க முயன்றவர்களை காவல் ஆய்வாளர் எச்சரிக்கை செய்து சம்பந்தப்பட்ட எதிர் தரப்பினரை வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார். காவல் நிலையம் முன்பு குடும்பமே தீ குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW