பஞ்சப்பூரில் தனியார் ஆம்னி பேருந்து நிலையம் - டெண்டர் கேட்டது மாநகராட்சி

பஞ்சப்பூரில் தனியார் ஆம்னி பேருந்து நிலையம் - டெண்டர் கேட்டது மாநகராட்சி

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.150 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இப்பணியை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 'பஞ்சப்பூர் மாஸ்டர் பிளான்' திட்டத்தில் மேலும், பேருந்து நிலையம் அருகிலேயே கனரக வாகன சரக்கு முனையம், பல்வகை பயன்பாட்டுமையம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகிறது. இதுதவிர, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் எதிர்புறமுள்ள பசுமைப்பூங்காவில் புதிய மார்க்கெட் கட்டும் பணியும் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் அருகிலேயே, தனியார் ஆம்னி பஸ்களுக்காக தனி பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. திருச்சி மாநகரில் இருந்து பெங்களூரு, சென்னை, புதுச்சேரி, திருவனந்தபுரம், கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு நுாற்றுக்கணக்கான தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த பேருந்து நிறுத்த மத்திய பஸ் நிலையத்தில் இடமில்லாத தால் அதன் அருகிலுள்ள ராக்கின்ஸ் சாலை, வஉசி சாலை, வில்லியம்ஸ் சாலை ஆகிய இடங்களில் நிறுத்தி இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகிலேயே வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்பிக்கப்பட்டது.

இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மாநகராட்சியின் மூலதன மான்ய நிதி மற்றும் மாநகராட்சி (2024-25)ன் கீழ் ரூ.17.60 கோடியில், தனியார் ஆம்னி பேருந்து நிலையம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி டெண்டர் இறுதி செய்யப்படும்.

சுமார், 2 ஏக்கர் பரப்பளவில் 100 ஆம்னி பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், வணிக கடைகளும் அமைக்கப்பட உள்ளன. இந்த பேருந்து நிலையம் ஆம்னி பேருந்துகளின் பிரச்னைக்கு ஒரு மிகப் பெரிய தீர்வாக அமையும். இந்த ஆம்னி பேருந்து நிலையம் மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் அமையும்".

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision