டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து திருச்சியில் சாலை மறியல்:
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.எம்.ஐ பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தியதிலிருந்து அந்த மசோதாவிற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் ஜாமிய்யா (ஜே.எம்.ஐ) பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த காவல் துறையினர் அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்களுக்கும்,மாணவிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதே போல இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.இந்த தடியடிக்கு கண்டனம் தெரிவித்தும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,அறவழியில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவ கூடாது, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(எஸ்.ஐ.ஒ) திருச்சி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் முஹம்மது ஜாஃபர் தலைமையில் பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் எஸ்.ஐ.ஒ ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டர்.எஸ்.ஐ.ஒ நடத்திய இந்த மறியல் போராட்டத்திற்கு ஆதரவாக வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியை சேர்ந்தவர்களும் அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஜமால் முஹம்மது தலைலையில் கலந்து கொண்டனர்.கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எஸ்.ஐ.ஒ முன்னாள் மாநில செயலாளர் பீர் முஹம்மது தெரிவித்தார்.இந்த மறியல் போராட்டத்தால் பாலக்கரை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த சாலை மறியலில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.