பட்டாம் பூச்சியின் உலகம் பச்சைமலை: பட்டாம் பூச்சிபோல் பறக்க ஆசையா? -வாருங்கள்!

பட்டாம் பூச்சியின் உலகம் பச்சைமலை: பட்டாம் பூச்சிபோல் பறக்க ஆசையா? -வாருங்கள்!

“பச்சமலை” எங்கோ கேள்விப்பட்ட பெயர் போலவே உள்ளதே என்று நினைப்பவர்களுக்கு…
“பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத்தேனு
என்ற இளையராஜா இசையமைத்த பாடலைத் தவிர, பச்ச மலைக்கும் உங்களுக்கு பெரிய தொடர்பு இருந்திருக்காது. இது திருச்சியிலிருந்து சுமார் 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.ஆனால் திருச்சி வாசிகள் சிலருக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாமல் இருப்பது மகிழ்ச்சியா? கவலையா? என்பதற்கு இடையில் டூரிஸ்ட் கைகளில் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் இருப்பது ஒருவகையில் நல்லதுதான்.

பச்சைமலை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி,பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பரவி நிற்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த ஒரு மலைத்தொடர் . தமிழ் நாட்டில் உள்ள கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாது மலை போன்ற மலைத்தொடர்களுள் ஒன்று. சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு போன்ற நதிகள் பச்சைமலையில் உற்பத்தியாகின்றன.இந்த மலையானது 527.61 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1,072 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது. வனத்துறை கணக்கெடுப்பின்படி இந்த மலையில் 154 பறவை இனங்கள் வாழ்கின்றன.

மேலும் இந்த மலைப்பகுத்திக்கு 135 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வலசை வந்து செல்கின்றன. மேலும் இங்கு உள்ள காப்புக் காடுகளில் மான்கள் வாழ்கின்றன.
மேலும் கரடி, புள்ளிமான், பாம்புத்தின்னி கழுகு, மலைப்பாம்பு,மரத்தவளை, மயில் பட்டாம்பூச்சி நீல வால் பச்சைத்தும்பி,  காந்தள், மாகாளிக்கிழங்கு, இந்திய முள்ளம் பன்றி,இந்திய மரநாய் , இந்திய பழந்திண்ணி வௌவால், சன்ன தேவாங்கு, கொட்டகையின் ஆந்தை, இந்திய பக்கி, கட்டுவிரியன், இந்தியபாறைத்தேள் போன்ற விலங்கினங்களும் இங்கு வாழ்கின்றன.

Advertisement

இது ஒருபுறம் இருக்க..
வெள்ளிக்கிழமை மாலை நமது குழுவினருடன் புறப்பட்டோம். திருச்சியில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சைமலை நோக்கி பயணிக்கத் தொடங்கினோம். துறையூரைத்  தாண்டி 22 கிலோமீட்டர் தொலைவில் வனத்துறை சாலை ஆரம்பமானது. வாகனத்தை வன சோதனை அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு மேலேற தொடங்கினோம்… செல்லும் வழியெல்லாம் பசுமை நிறைந்த மரங்களும், செடிகளும், மஞ்சள் நிற பூக்களும் மங்களகரமாக வரவேற்றன.
டாப் செங்காட்டுப்பட்டியை வந்தடைந்தோம்.அங்கிருந்து வனத்துறை தங்கும் விடுதிக்கு சென்றடைந்தோம். அமைதியான சூழலில் வனங்களுக்கு இடையே நான்கு பெரிய தூண்களை கொண்ட அழகான வீடு. மின்சார வசதியுடன் கழிவறைகளும் டீவியும் என ஹைகிளாஸ் ஹோட்டல் ரூமை போல இருந்தது. திருப்பிய பக்கம் வனங்களில் வாசத்தை ரசித்து கொண்டிருந்தோம். இரவு வனத்துறை தங்கும் விடுதியிலேயே உணவு வழங்கப்பட்டது .இரவு உணவாக சப்பாத்தி , இட்லி, முட்டை என சுவைக்கும் பஞ்சமில்லை.
முதல்நாள் இரவு தங்கிவிட்டு சனிக்கிழமை விடியற்காலை அங்கிருந்து புறப்பட்டு மாமரத்துசோலை என்னும் இடத்திற்கு குழுவுடன் புறப்பட்டோம். அங்கிருந்து டிரகிங்க் செய்ய ஆரம்பித்தோம்.

இயற்கை வழித்தடத்தில் மேகங்களின்   குளிர்ந்த காற்றுடன், மூலிகை வாசத்தில், மெய்மறந்து ஒத்தையடி பாதையிலே  ‌
வனத்தில் நடக்க ஆரம்பித்தோம். வனத்துறையில் இருந்து மணி என்பவரின் உதவியுடன் வனத்துக்குள் செல்ல தொடங்கினோம். செல்லும் வழியிலேயே கொய்யாமரம் , மாமரம் , முந்திரி மரம் என அங்கேயே காலை உணவை பழங்களுடன் உண்டு களித்தோம்.

வனத்துக்குள் சென்று நான்கு கிலோமீட்டர் தொலைவில் சோழமாத்தி என்னும் கிராமத்தை சென்றடைந்தோம். “வந்தோரை வரவேற்கும் தமிழர் பண்பு இன்றளவும் நீடிக்கிறது என்றால் இவர்களைப் போல சிலர் இருப்பதால் தான்” தமிழரின் பண்பாடு மாறாமல் இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர் இங்குள்ள மக்கள். சென்றவுடன் இன்முகத்தோடு வரவேற்று பழங்களை பறித்துக் கொடுத்த சரஸ்வதி- செல்லத்தான் தம்பதியினர் மறக்கமுடியாது. ” எல்லாம் இருங்க சாப்பிட்டு போலாம், ரேசன் அரிசி இருக்கு நல்லா இருக்கும் சாப்பிட்டு போங்கப்பா” என இயல்பான நடையில் பேசினார்கள்.

சரஸ்வதி- செல்லத்தான்

“மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது எங்களுக்கு கரண்டே வந்துச்சு” இப்போது உள்ள ஆண்ட்ராய்டு செல்போன்கள் கூட வியப்பாகத்தான் பார்க்கின்றன இங்குள்ள மக்கள். தொலைத்தொடர்பு கிடையாது. காடுகளில் பயிரிட்டுள்ள மக்காச்சோளம் கிழங்கு வகைகளை கலை எடுப்பதும், அவற்றை பராமரிப்பதும் தான் இங்குள்ள பணியாக இருக்கிறது.சனிக்கிழமை இரவு அங்கேயே தங்கிவிட்டு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை
பச்சை மலையில் உள்ள மங்களம் அருவியை நோக்கி பயணித்தோம். வனத்துறை தங்கும் விடுதியில் இருந்து 30 நிமிடங்களில் அங்கு சென்றோம். மங்கலம் அருவியின் இன்சார்ஜ் அண்ணாதுரை அவர்களின் உதவியுடன் அருவியை நெருங்கினோம்.

இங்கிருந்து குற்றாலத்திற்கு எல்லாம் சென்று அருவியின் அழகை காண செல்வார்களே! ஆனால் நம் ஊரிலேயே இப்படி ஒரு இடம் இருக்கிறது என்பது இதுநாள் வரை தெரியாது என்பதுதான் முதலில் வியந்தோம்.உயரம் இல்லாமல் அழகாய் சறுக்கிய தண்ணீரின் அருவி பார்ப்பதற்கே பரவசப்படுத்தியது.
“அப்புறம் என்ன ஒரே டைவ் தான்!”
ஆனந்த குளியல் ஆடி, அருவியின் அழகை ரசித்து அன்றைய பொழுதை அங்கு கழித்துவிட்டு மாலையில் வீடு திரும்பினோம்.

மங்களம் அருவி

மேலும் என்ன இருக்கிறது?

தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டில் முழு கண்காணிப்பில் இம்மலை உள்ளதால் பாதுகாப்பிற்கு பயமில்லை.”மலை வாழ் மக்களுடன் ஒருநாள் தங்குதல். கலாச்சாரத்தை அறிதல்” போன்ற பேக்கேஜ்கள் வனத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களிலும் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும் வனத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வனத்துறையில் முன்பதிவு செய்து விடவேண்டும்.குறிப்பிட்ட நாளில் பதிவு செய்தவர்கள் பச்சமலை உள்ள டாப் செங்காட்டுப்பட்டிக்கு வர வேண்டும். அங்கு வனத்துறையினரும் மலைவாழ் மக்களும் வரவேற்பு அளிப்பார்கள்.பின்பு , அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச்சென்றும் மதியம் மலைவாழ் மக்களின் விருந்து உபசரிப்பும் வழங்கப்படுகிறது. மாலை வேளையில் தெருக்கூத்து, உறியடி, மலைவாழ் மக்களின் நடனம் போன்ற பாரம்பரிய நிகழ்வுகளும் இரவில் தங்குவதற்கு வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகளும் அங்கேயே உள்ளன. இந்த 24 மணி நேர பேக்கேஜுக்கு  4 குடும்பங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ₹1500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வனத்துறை காவலர் கணேஷ் நம்மிடம் பேசிய போது….: “வனத்துறைக்கு வரும் பொதுமக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. வருகிற பொதுமக்கள் சிலர் மது அருந்துதல் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிகளில் போடாமல் இருந்தால் பெரிய உதவியாக இருக்கும் என்றும், மலைவாழ் மக்கள் குச்சிகிழங்கு, மரவள்ளிக் கிழங்கு,மிளகு, சோளம் போன்ற விலை பொருட்கள் மிகக் குறைவான விலையில்  வியாபாரிகள் எடுத்துச் செல்கிறார்கள் இதனை அரசே ஏற்று செயல்பட்டால் இங்க உள்ள விவசாயிகள், மக்கள் பயனடைவார்கள்  என்பது என்னுடைய கருத்து” என்கிறார் வனத்துறை காவலர்.

வனத்துறை காவலர் கணேஷ்

கண்களுக்கும் ,மனதிற்க்கும் பச்சைமலையின் தோற்றம் உண்மையாக நம்முடைய மனதை குளிர்ச்சிப்படுத்தும்.வருகிற வீக்எண்ட் நாட்களை பச்சமலையில் பட்டாம்பூச்சியாவீர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.