பாதுகாப்பான தீபாவளி - கொண்டாட்டத்துடன், முன்னெச்சரிக்கையும் அவசியம்!!

பாதுகாப்பான தீபாவளி - கொண்டாட்டத்துடன், முன்னெச்சரிக்கையும் அவசியம்!!

தீபாவளி என்று எங்கு திரும்பினாலும் கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறோம். துணி எடுப்பதில் ஆரம்பித்து, பலகாரம் செய்வது, உறவினர்களை அழைப்பது, முக்கியமாக பட்டாசுகளை வாங்குவது என களைகட்டி கொண்டிருக்கும். இந்த சூழலில் கொண்டாட்டத்துடன் முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களை தெரிந்து வைத்து கொள்வதும் நல்லது. அதிலும் குறிப்பாக பலகாரம் செய்யும் போதோ, அல்லது பட்டாசு வெடிக்கும் போதோ ஏற்படக்கூடிய தீக்காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம், தீக்காயம் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்டால் தவிர்க்கவும் வழி சொல்கிறார் அவசர சிகிச்சை நிபுணர் மருத்துவர் அ.முகமது ஹக்கீம்,

சிறுகுழந்தைகளோ, பெரியவர்களோ யாராக இருந்தாலும் தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் வெடி அல்லது மத்தாப்பின் துகள்கள் பறந்து வந்து கண்களுக்குள் விழுந்து விட்டால் கட்டாயம் கண்களை கசக்க கூடாது. இது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடக்கூடும். எரிச்சலைக் குறைக்க ஐஸ் கட்டிகளையோ ஐஸ் தண்ணீரையோ கண்களில் ஊற்றக்கூடாது. உடனடியாக சாதாரண வெப்பநிலையில் இருக்கும் நீரில் கண்களை நன்றாக கழுவ வேண்டும்.

சுத்தமான துணியைக் கொண்டு கண்களை மூடி விட வேண்டும், அதன்பின் பாதிக்கப்பட்டவரை ஆசுவாசப்படுத்தி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்கள் நல சிறப்பு நிபுணரை (Ophthalmologist) சந்திக்க வேண்டும். கண்களில் ஏற்படும் காயங்கள் மிகவும் ஆபத்தானவை. எனவே எவ்வளவு விரைவில் கண்கள் நல சிறப்பு மருத்துவரை காண்கிறோமோ அத்தனை நல்லது. மருந்தகங்களில் சென்று சொட்டு மருந்துகளை வாங்கிப் போட்டு நேரத்தை கடத்தினால் பல நேரங்களில் பார்வையையே இழக்க வேண்டியிருக்கும் 

பட்டாசை தவிர சாதாரண தீப்புண் காயங்கள் பலகாரம் செய்யும்போதோ, மத்தாப்பு கங்கை தெரியாமல் தொடுவதால் நேரலாம் அல்லது மத்தாப்பில் இருந்து வரும் சிதறல்கள் படுவதால் நேரலாம். இத்தகைய புண்கள், தோலில் சிறு கொப்புளங்களை உருவாக்கும். சிறிய அளவில் இருக்கும் அந்த புண்ணில் பேனா மையை ஊற்றுவதோ, வேறு காப்பி பொடி வைப்பதோ, மீசைக்காரன் தைலத்தை ஊற்றுவதோ தவறு.

சிலர் ஐஸ்கட்டியை வைப்பார்கள், கட்டாயம் ஐஸ்கட்டியோ ஐஸ் தண்ணீரோ ஊற்றக்கூடாது, ஏற்பட்ட சிறு கொப்புளங்களை உடைத்தல் கூடாது. அதன் வழி கிருமித்தொற்று ஏற்பட வழிவகுக்கும். இப்படியான சூழலில் நாம் உடனடியாக குழாயில் இருந்து அல்லது குவளையில் இருந்து சாதாரண வெப்பநிலையில் இருக்கும் நீரை எடுத்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தொடர்ந்து அந்த காயம் மேல் ஊற்ற வேண்டும். சில்வர் சல்ஃபாடயசின் எனும் களிம்பை உடனே அருகில் இருக்கும் மருந்துக்கடையில் வாங்கி அந்த காயம் ஏற்பட்ட பகுதியில் தடவ வேண்டும். காயத்தை மூடுவதற்கு புண்ணோடு எளிதில் ஒட்டாத நெகிழியால் ஆன துண்டை உபயோகிக்கலாம். இதை Cling wrap என்று அழைப்போம்.

துணியால் ஆன பேண்டெய்டுகளை தவிர்க்க வேண்டும். அருகில் இருக்கும் மருத்துவரை சந்திக்க வேண்டும். டெடானஸ் தடுப்பூசி போட்டு அவர் பரிந்துரைக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து எடுக்க காயம் தொற்றின்றி குணமாகும். சிறுகாயங்கள் இல்லாமல் பெரும் தீக்காயங்கள் ஏற்பட்டால் காயமுற்ற இடம் வீங்கி விடும். கடும் வலியை ஏற்படுத்தும். பேனா மை, தேங்காய் எண்ணெய், ஐஸ் கட்டி மற்றும் ஐஸ் தண்ணீர் போன்றவற்றை தடவி நேரத்தை கடத்தாமல், உடனே குழாய் நீரில் நன்றாக காயம் பட்ட இடத்தை பத்துநிமிடங்கள் காட்ட வேண்டும்.

முடிந்தால் சில்வர் சல்ஃபா களிம்பின் மூலம் காயம் பட்ட இடத்தை மூடி அதன் மீது ஒரு சுத்தமான நெகிழித்தாள் கொண்டு மூடி உடனே மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டும். அசுத்தமான துணி அல்லது துணி பேண்டெய்டுகளை காயத்தை கட்டுவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு மற்றும் மத்தாப்பு வெடிக்க சில பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்ற வேண்டியது அவசியம். அதில் முக்கியமானது கட்டாயம் பெரியோர் கண்காணிப்பின்றி குழந்தைகளை பட்டாசு மத்தாப்பு வெடிக்க அனுமதிக்கக்கூடாது. ஒரு வாளித்தண்ணீர் கட்டாயம் பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் இருக்க வேண்டும்.

தொல தொலவென்று லூசான துணிமணிகளை அணிந்து மத்தாப்பு வைக்கக்கூடாது. தீப்பற்றும் வாய்ப்பு அதிகரிக்கும், கைகளை வைத்து வெடி வெடிப்பது ஆபத்தானது என்பதால் அதனை தவிர்த்தல் அவசியம், வெடிக்காத வெடிக்கு அருகில் செல்லக்கூடாது. அதன் மீது தண்ணீரை ஊற்றி அணைத்து விட வேண்டும். இனிமேல் வெடிக்க இருக்கும் வெடிகளை தூரத்தில் வைத்திருக்க வேண்டும். தற்போது வெடிக்கும் மத்தாப்பின் துகள்கள் அதன் மீது பட்டால் பெரிய தீ விபத்து உருவாகும் வாய்ப்பு அதிகம்.

குடிசைகள் இருக்கும் பகுதிகளில் கட்டாயம் ராக்கெட் போன்ற பறந்து சென்று வெடிக்கும் வெடிகளை சமூக நலன் கருதி தவிர்க்க வேண்டும். காலணிகளை அணிந்து கொண்டு மத்தாப்பு வெடி வெடிக்க வேண்டும்.வெடித்த மத்தாப்புகளை முறையாக தண்ணீர் இருக்கும் வாளியில் கங்கைப்போட்டு அமர்த்திவிட வேண்டும், பட்டாசுகளை வெடித்து முடித்த பின் அந்த இடத்தில் முழுவதும் தண்ணீர் ஊற்றி மிச்ச மீதி எரியும் கங்குகளை அணைக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் தீபாவளித் திருநாளை கொண்டாடுவதே முக்கியமானது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision