நிழல் இல்லா தினம் : பரிசோதித்து மகிழ்ந்த மாணவர்கள்!

திருச்சியில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிழல் இல்லா தினத்தை பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பல்வேறு இடங்களில் பரிசோதித்து மகிழ்ந்தனர்.
தினந்தோறும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வது போல தெரிந்தாலும் ஆண்டுக்கு 2 நாள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும். அப்போது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவான நிழல் அப்பொருளின் பரப்பிற்குள்ளே விழுவதால் அதன் நிழலை நாம் பார்க்க முடியாது. இந்நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடைபெறும்.
எனவே நிழல் இல்லா தருணம் ஏற்படும் அந்த நாள்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்கிறோம். இதன்படி இந்தாண்டு வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகள் பூஜ்ய நாள் என்பதால், திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - அறிவியல் பிரச்சார உபகுழு ஒருங்கிணைப்பில் பல்வேறு இடங்களில் நிழல் இல்லா நாள் பரிசோதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நிழல் இல்லா தின பரிசோதனை நிகழ்வு நண்பகல் 12.15-க்கு நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை.ஜார்ஜ் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ் கருத்துரை வழங்கினார்.
இதேபோல, பெல் கிளை சார்பாக கைலாசபுரம், திருவெறும்பூர் கிளை சார்பாக அரியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மலைக்கோட்டை கிளை சார்பாக சரோஜா கஸ்தூரி ரெங்கன் நடுநிலைப்பள்ளி, கருமண்டபம் கிளை சார்பாக அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி, வையம்பட்டி அணியாப்பூர் கிளை சார்பாக அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, கு.வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணிகண்டம் அமைப்புக்குழு சார்பாக தாயனூர் அரசு
உயர்நிலைப்பள்ளி, மருங்காபுரி அமைப்புக்குழு சார்பாக டி.சொக்கநாதபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணப்பாறை அமைப்புக்குழு சார்பாக ஆளிப்பட்டியிலும் இந்தப் பரிசோதனை நிகழ்வு நடைபெற்றது.
இதில் அறிவியல் இயக்க நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு நிழல் இல்லா நாள் பரிசோதனை மேற்கொண்டு மகிழ்ந்தனர்.
அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் க.பகுத்தறிவன், ஆ.யோகலட்சுமி, கிளை நிர்வாகிகள் திருநாவுக்கரசு, தனலெட்சுமி, சரண்யா, பூ.பழனியாண்டி, காயத்ரி, இளங்கோவன், புவனேஸ்வரி ஆகியோர் குழந்தைகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision