ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடக்கம்: புனித நீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுத்து யானை மீது வைத்து ஊர்வலம்

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடக்கம்: புனித நீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுத்து யானை மீது வைத்து ஊர்வலம்

காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைக்கான புனித நீர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து வெள்ளி குடங்களில் கோயில் யானை மீது வைத்து ஊர்வலம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் உப கோயிலாக விளங்கும் அருள்மிகு காட்டழகிய சிங்கப்பெருமாள் 15 நூற்றாண்டுகளுக்கு முந்தையது என கூறப்படுகிறது. இரணியனை அழித்து பிரகலாதனைக் காப்பாற்றி அருளிய எம்பெருமானின் அவதாரமாக விளங்கும் நரசிம்ம பெருமாளை யானைகள் சூழ்ந்து காடுகள் நிறைந்த இப்பகுதியில் யானைகளிடமிருந்து பொதுமக்களையும், விளை நிலங்களையும் காக்க பெரியாழ்வாரின் சீடனாக விளங்கும் வல்லப தேவபாண்டியன் நிறுவியதுடன், காட்டை திருத்தி சீரமைத்த ஆலயம் என்பதால் காட்டழகிய சிங்கப்பெருமாள் என்ற பெயர் பெற்ற இவ்வாலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இவ்வாலயத்தின் கும்பாபிஷேக பூஜைகள் நேற்றைய தினம் மாலை அனுக்ஞை மற்றும் வாஸ்து பூஜைகளை நடைபெற்றதை அடுத்து இன்றைய தினம் யாகசாலை பூஜைக்கான புனித நீரானது வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் ஆற்றிலிருந்து வெள்ளி குடங்களில் கோவில் யானை ஆண்டாள் மற்றும் பட்டாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து ரக்ஷா பந்தனம் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்த யாக வேள்வியில் பங்கேற்று நரசிம்ம பெருமாளை வழிபாடு செய்தனர்.