காவிரி பாலத்தின் ஓரத்தில் மண் அரிப்பு - தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
திருச்சி முக்கொம்பு அணை வரை அகண்ட காவிரியாக பாய்ந்து வரும் காவிரி, முக்கொம்பு அணையில் இருந்து, காவிரியாகவும், கொள்ளிடமாகவும் பிரிகிறது. இந்த இரண்டு ஆறுகளுக்கும் இடையே ஸ்ரீரங்கம் தீவு போல் அமைந்துள்ளது.
ஸ்ரீரங்கம் பகுதியில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் இருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் உபரி நீர், காவிரி பாலத்தின் மேல்புறம் வழியாக பாய்ந்தோடி, காவிரி ஆற்றில் கலக்கும் வகையில், வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் வடிகால் வழியாக, காவிரி ஆற்றில் கலந்த போது, மாம்பழச் சாலையை ஒட்டிய பகுதியில் பாலத்தின் அருகே புதிய பாலன் அமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள சாலையில் மணல் அரிப்பை ஏற்படுத்தியது.
பாலத்தை ஒட்டிய அணுகு சாலையின் மேல்பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக, பாலத்தை ஒட்டிய கரைப்பகுதியை பலப்படுத்தும் வகையில்,சவுக்கு மரங்கள் நட்டு, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, நெடுங்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது.... காவிரி பாலத்தை ஒட்டிய வடிகால் வாய்க்கால் கரைப்பகுதியில், 70 மீட்டர் நீளத்திற்கு வலுவூட்டும் பணி நிறைவடைந்துள்ளது.
பாலம் பாதுகாப்பாக உள்ளது. வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாலும், காவிரி ஆற்றில் அதிக அளவு நீர்வரத்து இருக்கும் என்பதாலும், கரையை பலப்படுத்துவது, பாலத்தின் அணுகு சாலைக்கு பாதுகாப்பானதாக இருக்கும். தற்போது உள்ள பழைய காவிரி பாலத்தின் அருகே, 106 கோடி ரூபாயில், புதிய நான்கு வழி பாலம் அமைக்கப்பட உள்ளது.
புதிய பாலம் கட்டும் போது, மணல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகள் நிரந்தரமாக சரி செய்யப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision