விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வந்தது சூரிய ஆற்றலில் இயங்ககூடிய குளிர்பதன சேமிப்பு அமைப்பு:
திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் சூரிய விண்கலத்தில் இயங்கக்கூடிய குளிர்பதன சேமிப்பு அமைப்பு வெற்றிகரமாக விவசாயிகளின் பயன்பாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டது.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் நிறுவனமும் தஞ்சாவூர் இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப கழக நிறுவனத்துடன் இணைந்து சூரிய சக்தி குளிர் கிடங்கு செயல் மாதிரியை உருவாக்கி இருந்தனர். அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் மினி சாஜி தாமஸ், தமிழக வாழை உற்பத்தி மையம் மேலாண்மை இயக்குனர் அஜிதன், நச்சலூர் விவசாய உற்பத்தி நிறுவன மேலாளர் கரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய பல்வேறு படைப்புகளை கண்டுபிடித்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக சோலார் வசதியுடன் இயங்கக் கூடிய குளிர்பதன சேமிப்பு அமைப்பினை உருவாக்கி இருக்கின்றனர். சூரிய ஒளியை பயன்படுத்தி இயங்கும் இந்த குளிர்பதன சேமிப்பு அமைப்பில், 150 கிலோ அளவிலான காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்க முடியும். இதில் உள்ள பிஎஸ்சிஎஸ் அமைப்பானது மின்சேமிப்பு களமாக இயங்கி சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை சேமித்து வைக்கும். இதனால் சூரிய ஒளி இல்லாத பொழுது இந்த குளிர்பதன அமைப்பு இயங்கும். விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் இருந்து அறுவடை செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லும் வரை அதன் தன்மை மாறிவிடாமல் பாதுகாப்பதற்கு இந்த குளிர்பதன அமைப்பு பயன்படும்.
இதில் காய்கறிகள் மற்றும் பழங்களை 40 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை கெடாமல் புத்துணர்வுடன் வைக்க முடியும்.கடந்த மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட இந்த குளிர்பதன சேமிப்புக் கிடங்கு பரிசோதனைக்காக கடந்த ஒன்பது மாதங்களாக பரிசோதிக்கப்பட்டு, தற்போது விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்படுகிறது. மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த குளிர்பதன அமைப்பு சோலார் உதவியுடன் இயங்குவதால் மின்சாரமும் தேவைப்படாது. விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இந்த குளிர்பதன சேமிப்பு அமைப்பு அமையும்.