குரங்கம்மை பாதிப்பு திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு
வெளிநாடுகளில் பரவிய குரங்கம்மை பாதிப்பு தற்போது இந்தியாவிற்குள்ளும் வந்துள்ளது. கேராளவில் இருவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் யாருக்கேனும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
எட்டு படுக்கை வசதிகளுடன் அந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டை திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு மருத்துவர்களுடன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டீன் நேரு... அமெரிக்கா, ஆப்ரிக்கா, இஸ்ரேல், ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை அதிகம் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களின் எச்சில், அணில், குரங்கு போன்றவற்றின் மூலம் இது பரவுகிறது. காய்ச்சல், நெரிக்கட்டுவது, உடலில் கொப்பளங்கள், கடுமையான தலைவலி உள்ளிட்டவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் இந்த பாதிப்பு ஏற்படவில்லை இருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் சர்வதேச விமான நிலையம் இருப்பதால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க இந்த வார்டு பயன்படும். விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்க மருத்துவ குழுவினர் விமான நிலையத்தில் உள்ளார்கள்.
பயணிகளுக்கு யாருக்காவது குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். குரங்கம்மை உயிரிழப்புகளை ஏற்படுத்தாது இருந்த போதும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், முககவசம் போன்றவற்றை தொடர்ந்து அணிய வேண்டும்,
இயன்றவரை குரங்கம்மை பாதிப்பு குறையும் வரை வெளிநாட்டு பயணங்களை தவிர்ப்பது நல்லது என்றார். மேலும் குரங்கம்மை பாதிக்கப்படவர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY#
டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO