பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டைப் -1 நீரிழிவு நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டைப் -1 நீரிழிவு நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் பிரபு டயாபட்டீஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் உடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் கண்டறியும் சிறப்பு முகாம் திருச்சி தென்னூர் விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் வரவேற்று பேசுகையில்.... பன்னாட்டு டயாபெடிஸ் அமைப்பின் (IDF) அறிக்கையில் உலக அளவில் இந்தியாவில் அதிக அளவு குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் வகை-1 நீரிழிவு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக NCPCR கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் இன்சுலின் மருந்தினை ஊசி வழியே செலுத்துதல், நாள்தோறும் இரத்த சர்க்கரை அளவை கண்காணித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இத்தகைய வகை1 நீரிழிவு குறைபாடுடைய மாணவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை பள்ளியில் செலவிடுவதைக் கருத்திற்கொண்டு அவர்களின் நலன் காக்கும் பொருட்டு, பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நீரிழிவு வகை1 பரிசோதனை முகாம் இன்று நடைபெறுகிறது என்றார். இந்நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது சபி தலைமை வகித்தார். பொருளாளர் ரங்கராஜன், நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், இயக்குனர்கள் குமார், பாஸ்கர், அடக்குநர் முகமது உமர் கத்தாப், தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன், சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பிரபு டயாபட்டீஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் மருத்துவர் ரவீந்திரநாத், வருண் பிரசன்னா தலைமையிலான மருத்துவக் குழுவினர் உணவியல் ஊட்டச்சத்து நிபுணர் அகிலா மற்றும் தியாகராஜன் வெலிங்டன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

நீரிழிவு நோய் குறித்து எடுத்துரைக்கையில் நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், இது கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோது ஏற்படும். இன்சுலின் என்பது இரத்த குளுக்கோஸை ஒழுங்குபடுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும். இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பு என்றும் அழைக்கப்படும் ஹைப்பர் கிளைசீமியா, கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் பொதுவான விளைவு மற்றும் காலப்போக்கில் உடலின் பல அமைப்புகளுக்கு, குறிப்பாக நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களுக்கு கடுமையான சேதம் ஏற்படுகிறது.

நீரிழிவு நோயின் அறிகுறிகளாவது வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மங்கலான பார்வை, களைப்பு, தற்செயலாக எடை இழப்பு போன்ற அறிகுறிகளை காட்டும். காலப்போக்கில், நீரிழிவு இதயம், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும். வகை 1 நீரிழிவு வகை 2 நீரிழிவு உள்ளது.

நீரிழிவு நோயின் மோசமான விளைவுகளைத் தடுக்க ஆரம்பகால நோயறிதல் முக்கியமானது. நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான சிறந்த வழி, ஒரு சுகாதார மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகள் மற்றும் இரத்த பரிசோதனைகள் மேற்கொண்டு அதற்குத் தக்க வாழ்வியல் முறைகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, வளர் இளம் பருவத்தினருக்கும், அதிக வயது உடையவர்களுக்கும்தான் இந்த நோய் பாதிப்பு ஏற்படும். மறுபுறம் குழந்தைகளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது டைப்-1 என்று அழைக்கப்படுகிறது.

டைப்-1 முதல் வகை நீரிழிவு நோயில் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பகுதியில் உள்ள B செல்கள் மெதுவாக அழிக்கப்படுகின்றனகருவில் அல்லது பிறந்த உடன் இந்த அழிவு ஆரம்பித்து, சுமார் 80 சதவீதம் செல்கள் அழிந்தவுடன் நோய் வெளிப்படுகிறது. மரபணுக்கள், வைரஸ், சில மருந்துகள், அதிக மன அழுத்தம் போன்றவை இதற்குக் காரணம். டைப்-1 நீரிழிவு நோயானது 1 - 2 வயதுக்குள், 5 வயதில் மற்றும் பருவ வயதில் என்று மூன்று பிரிவுகளில் அதிகமாகக் கண்டறியப்படுகிறது. டைப்-1 நீரிழிவு நோய் மரபணு நோய் என்றும் கூறப்படுகிறது. டைப்-1 நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசி அல்லது மாத்திரைகள் கட்டாயம் தரப்பட வேண்டும் என்றார். நிறைவாக பள்ளி ஆசிரியர் உமா நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision