பள்ளி சுவர்களுக்கு வர்ணம் பூசிய மாணவர்கள் -சமூகவலைதளத்தில் குவியும் பாராட்டு

பள்ளி சுவர்களுக்கு வர்ணம் பூசிய மாணவர்கள் -சமூகவலைதளத்தில் குவியும் பாராட்டு

வகுப்பறையை கோவிலாக நினைத்து பள்ளி சுவர்களுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவு பெறச் செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டு குவிந்து வருகிறது. கொரோனா பாதிப்புக்கு பின் கிட்டத்தட்ட 1½ ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கல்வி பாதிப்பை போக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில நாட்களாக பள்ளி வகுப்பறையில் சில மாணவர்கள் ஆசிரியரை தகாத வார்த்தையால் திட்டுவது, வகுப்பறை நாற்காலிகளை உடைத்து எறிவது, ஆசிரியர் முன்னிலையிலேயே திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவது, மாணவிகளின் மடியில் தலை வைத்து படுத்து செல்போன்களை பார்ப்பது போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதைக்கண்ட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவ சமுதாயம் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எல்லோர் மனதிலும் எழுந்தது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களிடம் கூறுகையில், பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது தொடர்பாக, இதில் உள்ள சாதக, பாதக விஷயங்களை ஆராய வேண்டும் என்றும், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கவுன்சிலிங் அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

இந்தநிலையில் திருச்சி லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் தங்களின் பொறுப்பான செயலால் பெற்றோருக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்து முன்மாதிரி மாணவர்களாக திகழ்ந்துள்ளனர். அந்த மாணவர்கள் தேர்வு முடிந்து விடைபெறும் நாளில் தாங்கள் பயின்ற பள்ளி வகுப்பறையை கோவிலாக நினைத்து, சுவர்களுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுற செய்துள்ளனர்.

மாணவர்களின் இத்தகைய செயலை கண்டு நெகிழ்ச்சி அடைந்த ஆசிரியர் ஒருவர், இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இந்த மாணவர்களுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. லால்குடி அரசு பள்ளிமாணவர்களின்போற்றுதலுக்குரியஇத்தகைய செயல் இன்றைய மாணவ சமுதாயம், நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்ககூடிய வல்லமையுடன் தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை விதையை மீண்டும் துளிர்க்க செய்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO