திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் கூலி வேலை செய்த மாணவர்கள்

திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் கூலி வேலை செய்த மாணவர்கள்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக தனி அமைப்பு உருவாக்கப்பட்டு 18 வயதிற்கு குறைவான சிறுவர், சிறுமிகள் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்தால் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரண்டு சிறுவர்கள் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உள்ளே காலி இடத்தில் கொட்டப்பட்டிருந்த எம்சாண்ட் மணலை மண்வெட்டியால் அள்ளி மற்ற இடங்களுக்கு கொட்டும் வேலையை செய்தனர்.

பின்னர் அந்த சிறுவர்களிடம் கேட்ட போது... நாங்கள் இருவரும் அண்ணன் - தம்பி. மிளகுபாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் 10ம் வகுப்பும், சிவசங்கர் கல்லூரி முதலாமாண்டு படித்து வருவதாக கூறினர். கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு தெரிந்த நபர் எங்களை இந்த வேலைக்கு அழைத்து வந்தார். சம்பளம் எவ்வளவு என்று கூறவில்லை என தெரிவித்தனர்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படிப்பை மறந்து தொழிலாளர்களாக தடம் மாறும் மாணவர்களை கண்டறிய வேண்டிய காவல்துறையினரே மாணவர்களை மணல் அள்ள வைத்தது  பொதுமக்கள் மத்தியில் வருத்தமடையச் செய்துள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW