ஆவின் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சம்மன் அனுப்பி நடவடிக்கை - பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டி

ஆவின் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சம்மன் அனுப்பி நடவடிக்கை - பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டி

ஆவின் நிர்வாகத்தின் சார்பில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கான நிலுவையில் உள்ள பணம் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 சங்கங்களுக்கு ரூ.81லட்சம் நிலுவை தொகையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் வழங்கியதுடன், பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகள் பராமரிப்பு குறித்த குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் குரல் ஒலி சேவை ஆகியவற்றையும் தொடங்கி வைத்தனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர்.... ஆவினில் கடந்த ஆண்டு 855 டன் பால் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு 922 டன் தயாரிக்கப்பட்டு விற்பனை முடிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் விற்பனை மேலும் அதிகரிக்கும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.329 கோடி நிலுவை தொகை வழங்கப்பட வேண்டி உள்ளது. அதில் அதிக அளவு நிலுவைத்தொகை திருச்சியில் தான் தர வேண்டி உள்ளது. இந்த நிலுவைத்தொகை தமிழ்நாடு முழுவதும் உள்ள 4 லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகளுக்கு  வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர்.... 329கோடி நிலுவைத்தொகை என்பது தொடர்ந்து நடக்கும் செயல்தான், தமிழகம் முழுவதும் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளுக்கு பணம் வழங்கும் பணி நடைபெறுகிறது. ஆவின் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. அதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடவடிக்கையும் நிலுவையில் உள்ளது. ஆவினில் பொருட்களை அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை பணம் கொடுத்துதான் பொருட்களை வாங்க வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி சுத்தமான நெய், பாலினால் ஆவின் இனிப்பு வகைகள் தயாரித்து விநியோகம் செய்கிறோம். இதுவரையிலும் இல்லாத வகையில் சென்னையில் அதிகபட்சமாக இன்று ஒருநாள்மட்டும் 3 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் 1500டன் விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பத்தாண்டுகளாக பால் வளத்துறையில் எந்த செயல்பாடுகளும் நடைப்பெறவில்லை. தற்போது நாங்கள் மேற்கத்திய நாடுகள், கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஆவின் விற்பனையை தொடங்கி உள்ளோம். அதேபோல அண்டை மாநிலங்களிலும் விற்பனையை தொடங்கி உள்ளோம். கொரோனா காலம் என்பதால் ஆவினில் மாதாந்திர கூட்டம் நடத்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவின் சேர்மன் உள்ளிட்டோர் பதவி கலைக்கப்படவில்லை. அதேபோல சங்கங்களும் கலைக்கப்படவில்லை. முதலமைச்சர் ஜனநாயகத்தை மதிக்க கூடியவர் என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision