திருச்சியில் வருகின்ற சனி மற்றும் ஞாயிறு தற்காலிக சந்தைகள் இயங்காது!! இறைச்சி கடைகளுக்கும் அனுமதி இல்லை!!

திருச்சியில் வருகின்ற சனி மற்றும் ஞாயிறு தற்காலிக சந்தைகள் இயங்காது!! இறைச்சி கடைகளுக்கும் அனுமதி இல்லை!!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையென்ற அடிப்படையில் அதிகமாக கூடுகிற நிலை உள்ளதாக காவல்துறையினரால் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று தடுத்திடவும், பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற அனைத்து தற்காலிக சந்தைகளும் 18/04/2020 சனிக்கிழமை மற்றும் 19/04/2020 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் முற்றிலுமாக செயல்பாடு நிறுத்தப்படும்.

Advertisement

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் செய்திக்குறிப்பில் “மொத்த காய்கறி விற்பனை 17/04/2020 இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை இரவு நேரங்களில் செயல்படக்கூடாது. பொதுமக்கள் தங்கள் இல்லத்தின் அருகிலுள்ள சிறு கடைகள் மூலம் தேவையான காய்கறிகளை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. காய்கறிகள் வாங்குவதற்கு நான்கு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை. இருசக்கர வாகனத்தில் மட்டுமே தங்கள் இல்லம் அமைந்துள்ள இடத்திற்கு 2 கிலோ மீட்டர் சுற்றளவில் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் மருத்துவ சேவைக்கு மட்டும் வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மாநகராட்சி சார்பில் வார்டுக்கு 2 நடமாடும் காய்கறி வண்டிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.என்றார்.

மேலும் இறைச்சி கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்காது. மேற்கண்ட தடையை மீறி செயல்படும் உரிமையாளர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்படுகிறது