இஸ்லாமியர்களின் புனித பயணத்திற்கு ஒன்றிய அரசு துணை நிற்க வேண்டும்- துரை வைகோ

ஹஜ் பயணத்தை தனியார் மூலம் மேற்கொள்ள உள்ள இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை களைந்து அவர்கள் அனைவருக்கும் மினாவில் தங்குமிடத்தை உறுதி செய்துதர உரிய முயற்சிகளை மேற்கொண்டு இஸ்லாமியர்களின் புனித பயணத்திற்கு ஒன்றிய அரசு துணை நிற்க வேண்டும். துரை வைகோ அறிக்கை.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணத்தின் போது மினா பகுதியில் கூடாரத்தில் தங்குவது முக்கிய சடங்காகக் கடைபிடிக்கப்படுகிறது.2025 ஆம் ஆண்டிற்கான இந்தியர்களுக்கான ஹஜ் பயண ஒதுக்கீடு 1,75,025 ஆகும். அதில் 70:30 விகிதப்படி 1,22,518 நபர்கள் இந்திய ஹஜ் கமிட்டி மூலமும், மீதமுள்ள 52,507 நபர்கள் தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமும் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.
தனியாருக்கு ஒதுக்கப்பட்ட 52,507 பயணிகளுக்கு மினாவில் தங்குமிட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மினாவில் தங்காமல் ஹஜ் கடமை நிறைவேறாது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இந்நிலையில், இந்த மினா தங்குமிடம் ஒதுக்கீடு செய்யப்படாத நிலைக்கு ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொள்வதில் எவ்வித பயனுமில்லை. இதனால் பாதிக்கப்படப்போவது ஹஜ் செல்ல காத்திருந்த இஸ்லாமிய பெருமக்கள் தான்.
இந்த நேரத்தில், ஒன்றிய அரசின் தலையீட்டால், சவுதி ஹஜ் அமைச்சகம் 10,000 இந்திய பயணிகளுக்கு மினாவில் தங்குமிடம் ஒதுக்கித் தருவதற்கு வேண்டிய பணிகளைச் செய்ய சம்மதித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது நல்ல முயற்சி என்றாலும், முழு எண்ணிக்கையான 52,507 பயணிகளுக்கும் மினாவில் தங்குமிடம் ஒதுக்கி, அவர்களின் ஹஜ் கடமைய
எவ்விதத் தடையும் இன்றி நிறைவேற்றுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision