திருச்சியில் இருந்து கோவைக்கு சிகிச்சைக்காக 2 1/2 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்ட குழந்தை

திருச்சியில் இருந்து கோவைக்கு சிகிச்சைக்காக 2 1/2 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்ட குழந்தை

திருச்சி மணப்பாறை மருங்காபுரி நவக்குடி பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி. இவருக்கு 7 நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் குழந்தையை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு, மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மருத்துவர்கள் பரிசோதனையில் குழந்தைக்கு சிக்கலான இதய பிரச்சினை இருப்பதும், அதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கண்டறிந்தனர். தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல அரசு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

ஆனால் குழந்தையின் பெற்றோர். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரும்பினர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அதிநவீன ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அதன் மூலம் குழந்தையை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சாலை வழியாக கொண்டு செல்லதிட்டமிடப்பட்டது.

இதற்காக திருச்சி மாவட்ட எல்லை வரை ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல மருத்துவமனை நிர்வாகம் போலீசாரின் உதவியை நாடியது. இதை யடுத்து திருச்சி மாநகர போலீசார் உத்தரவுபடி போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போக்குவரத்து போலீசார் வழக்கமான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும், அந்த ஆம்புலன்சுக்கு தடையற்ற பாதை (கிரீன் காரி டார் அலர்ட்) ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் சென்ற சாலையில் உள்ள சிக்னல்கள் பகுதியில் போலீசாரை நியமித்து விரைவாக செல்ல ஏற்பாடு செய்தனர். அந்த ஆம்புலன்ஸ் சுமார் 2 1/2 மணி நேரத்தில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருச்சியில் இருந்து கோவைக்கு சுமார் 215 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த தூரத்தை கடக்க 4 1/2 மணி நேரம் ஆகும். ஆனால் 2 1/2 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை கொண்டு செல்லப்பட்டதால் குழந்தையின் பெற்றோர் போலீசார் மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகம், ஆம்புலன்ஸ் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision