தினமும் 100 பேருக்கு உணவளிக்கும் திருநங்கைகள் - திருச்சியில் ஒரு நெகிழ்ச்சி!!

தினமும் 100 பேருக்கு உணவளிக்கும் திருநங்கைகள் - திருச்சியில் ஒரு நெகிழ்ச்சி!!

திருநங்கை என்ற பெயர்மாற்றம் உண்மையில் ஒரு சில திருநங்கைகளின் வாழ்க்கையே மாற்றியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஐபிஎஸ் உள்ளிட்ட நிறைய அரசுப் பணிகளில், தொகுப்பாளர் போன்ற தனியார் பணிகளில் இன்று திருநங்கைகள் எவ்வளவோ தடைகளை தாண்டி தங்களுடைய பயணத்தை தொடங்கியுள்ளனர்.

Advertisement

கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொருவரும் இந்த சொல்லை ஒலிக்காமல் இருந்திருக்க முடியாது. உலகத்தையே இன்றளவும் ஆட்டிப்படைத்து வரும் ஒரு கொடிய நோய். தமிழகத்தின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் ஒரு புறம் பல உயிர்களை பறித்தாலும், மறுபுறம் மனிதநேயத்தை இன்றளவும் நிலைநாட்டி வைத்திருக்கிறது இந்த நோய்‌.

உணவில்லாமல் வாழ்வாதாரம் இழந்து சாலைகளில் தஞ்சம் அடையும் எத்தனையோ பேரையும் உருவாக்கியுள்ளது இந்த கொரோனா காலகட்டம். "மனிதருக்கு மனிதன்தான் உதவுவான்" என்பது போல மனிதநேயம் உள்ள பலர் இந்த இக்கட்டான காலகட்டத்தில் பலரின் பசியையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றியுள்ளனர். 

இந்த அரும்பெரும் பணியை செய்து வருபவர்களுக்கு மத்தியில் "நாங்கள் கையேந்தி நின்ற காலத்தில் கைகொடுத்த சமுதாய மக்களுக்காக இந்த இக்கட்டான சூழலில் உதவி வருகிறோம்" என புன்னகையுடன் தினமும் 100 பேருக்கு திருச்சியில் உணவளித்து வரும் திருநங்கைகள் பற்றிய தொகுப்பு தான் இது!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் திருநங்கை சினேகா. திருச்சி மாவட்ட திருநங்கைகளுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக செயல்பட்டு வருபவர். சமீபத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றி சிறப்பித்து இதுவரை பல்வேறு சமூக செயற்பாடுகளில் பல்வேறு இக்கட்டான தடைகளையும் தாண்டி பயணித்து வரும் சாதனை திருநங்கை. இந்த இக்கட்டான ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து சாலையில் உணவின்றி தவிப்போருக்கு திருநங்கை சினேகாவுடன் திருநங்கைகள் நிலா, அம்சா விமலா ஆகியோர் சேர்ந்து தினமும் 100 பேருக்கு உணவளித்து வருகின்றார். 

அவர்களே இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் தருணத்தில் பலரிடம் உதவி கேட்டு அவர்கள் சிறுக சிறுக சேமித்த தொகையையும் சேர்த்து தினமும் சமைத்து திருச்சி மாநகரில் உள்ள மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகர், உறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று உணவில்லாமல் இருந்து வருபவர்களுக்கு உணவளித்து வருவது பார்ப்பவர்களுக்கு மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி செல்கிறது. இவர்களுடன் சந்தோஷ் மற்றும் பெருமாள் ஆகிய இருவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இது குறித்து திருநங்கை சினேகா கூறுகையில்..... "நாங்கள் கையேந்தி நின்ற காலகட்டத்தில் கைகொடுத்த இந்த சமுதாயத்திற்கு எங்களால் முடிந்த சிறிய உதவியை செய்து வருகிறோம். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து தினமும் 100 பேருக்கு உணவளிக்க காத்திருக்கிறோம்" என்றார் புன்னகையுடன்.....

திருநங்கைகள் என்றால் ஏளனமாய் பார்க்கும் இச்சமுதாயத்திற்கும் மத்தியில் இந்த சமுதாயமே தங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளனர் இந்த திருச்சி திருநங்கைகள்!!

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve