முக்கொம்பு கதவணை பணிகள் 2021ல் முடியும்! முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு:
திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் ரூ.387 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தஞ்சை திருமண விழாவில் பங்கேற்று திருச்சி வந்த முதல்வர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் சிவராசு, பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
“காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம்”..
காவிரியின் நீரை பல ஆறுகளுக்கு திருப்பி விடுவதற்காக கரிகாலச் சோழனால் இரண்டாம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டது கல்லணை. அதேபோன்று காவிரியின் வெள்ள நீரை கொள்ளிடத்திலும் திருப்பி விடுவதற்காக 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது தான் இந்த முக்கொம்பு மேலணை. திருச்சிக்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் கரூர் வழியில் உள்ளது. இதை திருச்சியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து சுமார் 177 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த முக்கொம்பு மேலணையில் வினாடிக்கு 2.70 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விட இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் கர்நாடக அணைகளில் இருந்தும், கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த வெள்ள பெருக்கில் முக்கொம்பில் 45 மதகுகளில் 9 மதகுகளை காலி செய்து அடித்துச் சென்றது அப்போதைய வெள்ளம்.
இப்பகுதியான சிறுகமணி, பெருகமணி, குணசீலம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அணை உடைந்ததால், பள்ளி குழந்தைகளை 10 கிலோ மீட்டர் சுற்றி வந்தும், போக்குவரத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். எத்தனையோ முறை இதனை விரைவாக அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டும் சற்று தாமதமாகவே துவங்கப்பட்டது.
மேலும் இந்த பணிகள் அனைத்தும் வருகிற 2021-ம்ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் வரும் ஜனவரி மாதமே பணிகளை முடிக்க தீவிரப் பணிகள் நடைபெற்று வருகிறது.