NCC மாணவர் படையில் தேசிய அளவில் தங்கம் வென்ற திருச்சி மாணவி!
தேசிய மாணவர்ப்படை என்று அழைக்கப்படும் என்.சி.சியின் அணி வகுப்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுடெல்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு பார்வையாளராக நரேந்திர மோடி பங்கேற்றார். அணி வகுப்பினை கண்ட மோடி பிறகு என்.சி.சி. படைப்பிரிவில் சிறந்து விளங்கியோருக்கு பதக்கங்களையும் விருதுகளையும் வழங்கினார். இதில் சிறந்த சீனியர் விங் (விமானப்படை) பிரிவில் திருச்சியை சேர்ந்த மாணவி தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும் திருச்சிக்கும் பெருமை சேர்த்துள்ளார்!
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை சேர்ந்தவர் ரேஷ்மா. தந்தை ரவிச்சந்திரன் தாயார் மாரியம்மாள். ரவிச்சந்திரன் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தந்தையுடைய அறிவுரையால் NCCயில் சேர்ந்த ரேஷ்மா இன்று தமிழகத்திற்காக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
தமிழகம், புதுவை, அந்தமான் நிக்கோபர் தீவுகளின் பிரதிநிதியாக பங்கேற்ற இவர் பிரதமர் நரேந்திர மோடி ரேஷ்மாவை வாழ்த்தி அவருக்கு தங்கப் பதக்கத்தை வழங்கினார். பிஷப் ஹீபர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி பயின்று வருகிறார் ரேஷ்மா.
இதுகுறித்து ரேஷ்மா அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது” என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது.இதில் தங்கப்பதக்கம் வாங்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை அது நிறைவேறியது. கடின முயற்சியால் தான் இந்த இலக்கை அடைய முடிந்தது.என்னுடைய பயிற்ச்சியாளர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். முதலில் நான் திருச்சி பகுதியில் இருக்கும் குழுவினருடன் போட்டியிட்டு தேர்வானேன். பிறகு தமிழகத்தில் இருந்து வந்த 6 குழுக்களிடம் போட்டியிட்டு தேர்வானேன். பிறகு தேசிய அளவில் இந்த வெற்றியை பெற்றுள்ளேன். இண்டெர்-குரூப் போட்டிகளும் இருந்தன. அதனை க்ளியர் செய்த பிறகு எழுதுத்தேர்வு, குரூப் டிஸ்கசன், இண்டெர்வியூ, மற்றும் ட்ரில், ஃபைரிங் போன்ற போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்றேன்..சி.சி தான் எனக்குள் இருக்கும் மிகச்சிறந்த திறமைகளை வெளிக் கொண்டு வந்தது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஏர்ஃபோர்ஸில் பணிபுரிய விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்” ரேஷ்மா
இம்மானுவேல் சகாயராஜ் என்பவர் தான் ரேஷ்மாவின் என்.சி.சி அலுவலர். திருச்சியில் இருந்து தங்கப்பதக்கம் பெறும் முதல் பெண் கேடெட் ரேஷ்மாவாக தான் இருப்பார் என்று அவர் கூறினார். திருச்சியிலிருந்து சென்று தேசத்தையே திரும்பிப்பார்க்க வைத்த ரேஷ்மாவுக்கு TRICHY VISION சார்பாக வாழ்த்துக்கள்