திருச்சியில் உள்ளூர் விடுமுறை!
திருச்சியில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 6-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.திருச்சியில் உள்ள திருவரங்கம் பெரிய பெருமாள் அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் மிக முக்கியமான உத்ஸவமாக வைகுண்ட ஏகாதசி திருவிழா திகழ்கிறது. இந்தத் திருவிழாவைக் காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருவரங்கம் கோயிலுக்கு வருகிறார்கள்.
குறிப்பாக, வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி, பகல்பத்து, ராப்பத்து என திருவாய்மொழித் திருநாள், திருமொழித் திருநாள் என இருபது நாட்கள் அத்யயன உத்ஸவம் களை கட்டுகிறது. அப்போது தமிழ்ப் பாசுரங்களைப் பாடி, அரங்கநாதனான நம்பெருமாளை மகிழ்விப்பார்கள்.இதனைக் காண பக்தர் கூட்டம் பெருமளவில் ஆலயத்துக்கு வருகிறது.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் வந்திருந்து, ஆயிரங்கால் மண்டபத்தின் மணல்வெளியில் அமர்ந்து பஜனைகள் செய்வதும் பாடுவதும் வழக்கம்.இந்நிலையில், திருச்சி மாவட்டத்துக்கு வைகுண்ட ஏகாதசியான ஜன.6 அன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.