திருச்சி மாணவர்கள் கார் தயாரித்து தேசிய அளவில் சாதனை: வழிநடத்திய சிங்கப்பெண்!
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பைக்குகளை எல்லாம் தாண்டி இப்பொழுது வீட்டிற்கு ஒரு கார் இருக்கும் நிலை உருவாகிவிட்டது. இந்த கார்களை புது விதமாக வடிவமைத்து தேசிய அளவில் பங்குபெற்ற திருச்சி கல்லூரி மாணவர்களின் சிறப்பு தொகுப்பு தான் இது!
திருச்சி பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரி கல்வியிலும் சாதனைகளிலும் திருச்சியின் தலை சிறந்த ஒன்றாக விளங்கி வருகிறது என்பதை நாம் அறிந்ததே. இக்கல்லூரி மாணவர்கள் கடந்த மூன்று வருடங்களாக கார் தயாரித்து தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு சென்று வந்துள்ளனர்.
சுமார் 11 லட்சம் மதிப்புள்ள இந்த காரினை மகேந்திரா மற்றும் SAE இந்தியா இவர்களின் துணையோடு காரின் அனைத்து பகுதிகளையும் இந்த கல்லூரி மாணவர்களே வடிவமைப்பு செய்கின்றனர். எலக்ட்ரிக்கல் ஏடிவி என மின்சாரத்தில் இயங்கும் இந்த காரினை வடிவமைத்து சமீபத்தில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிக்கு சென்றுள்ளனர். இந்தப் போட்டி மத்தியபிரதேசத்தில் பிதம்பூர் என்கிற இடத்தில் நடைபெறும். இந்த இடத்தில்தான் இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்து கார்களும் சோதனை ஓட்டம் நடைபெறும் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 10 முதல் 15 கல்லூரிகள் பங்கு பெற்று வருகின்றன.இதில் நம்முடைய திருச்சி சாரநாதன் கல்லூரி தமிழ்நாடு அளவில் 5 இடங்களிலும், இந்திய அளவில் 20 இடங்களிலும் இருப்பது என்பது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். இந்த காரின் வடிவமைப்புக்கு தேவையான நிதியினை திருச்சி LA சினிமாஸ், பிளாக் தண்டர், KR Fuels, Rivera Computer மற்றும் சில நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன.
ஒவ்வொரு சாதனையாளர்களுக்கு பின்னாலும் ஒருவர் இருப்பார். அது போல தான் இந்த கல்லூரி மாணவர்கள் சாதிப்பதற்கு ஒரு பெண்ணாய் தன்னுடைய கடின முயற்சியோடு மாணவர்களை வழிநடத்தி இவ்வளவு தூரம் சென்று பங்கு பெற வைத்தவர் காயத்ரி. இக்கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இதுகுறித்து காயத்ரி அவர்கள் கூறுகையில், “இப்போட்டியில் பங்கு பெற 25 மாணவர்கள் கொண்ட குழு எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் துறையில் இருந்து பங்கு பெறுவார்கள். இந்த காரின் வடிவமைப்பு ஒரு வருடம் நடைபெறும். முதல் சுற்று பஞ்சாபில் நடைபெறும் இப்போட்டிக்கு 5 மாணவர்கள் கொண்ட குழு இந்த காரினை பற்றிய வடிவமைப்பு மற்றும் இதுகுறித்த தகவல்களை சமர்பித்து வருவார்கள்.அதன் பிறகு இரண்டாவது சுற்று தேசிய அளவில் நடைபெறும். கடந்த வருடம் இப்போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் என் கல்லூரி மாணவர்கள் நந்தகுமார் மற்றும் ராகவன் ஆகியோருக்கு மகேந்திரா குழுமத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வருடத்தில் 5 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகின்றன அடுத்து வரும் ஆண்டுகளில் உலக அளவில் சென்று எங்கள் மாணவர்கள் சாதனை படைப்பார்கள்.“என்றார்
ஒரு பெண்ணாய் இருந்து, பேராசிரியர் மட்டுமல்லாமல் பல மாணவர்களை இன்று பெயர் வாங்க வைத்த ஆசிரியராகவும் செயல்பட்டுவரும் காயத்ரி அவர்களுக்கு TRICHY VISION சார்பாக வாழ்த்துக்கள்