2019 ம் ஆண்டு லாரி திருட்டு சம்பவம். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட திருடர்கள்

2019 ம் ஆண்டு லாரி திருட்டு சம்பவம். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட திருடர்கள்

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை மெயின் ரோட்டில் வசிப்பவர் குமாரசாமி மகன் ராதாகிருஷ்ணன் (56). இவர் சொந்தமாக டிப்பர் லாரி ஒன்றை வைத்து ஓட்டி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ந்தேதி சமயபுரம் அருகே உள்ள அக்கரைபட்டி கிராமத்திற்கு லோடு இறக்கிய பின்னர் லாரியை சமயபுரம் நால்ரோட்டில் நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது லாரியை திருடிச் சென்றதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ராதாகிருஷ்ணன்.

இதனையடுத்து லாரி திருட்டு குறித்து ராதாகிருஷ்ணன் சமயபுரம் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் லாரியை தேடி வந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் போலி நம்பர் பிளேட்டுகளுடன் இருந்த இரண்டு லாரியை போலீசார் மீட்டு விசாரணை செய்ததில், திருடப்பட்ட லாரிகளில் ஒன்று இரண்டு வருடத்திற்கு முன்பு சமயபுரத்தில் திருடப்பட்ட லாரி என தெரிய வந்தது.

மேலும் விசாரணையில்  லாரியை திருடியவர்கள் கோவை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் லாரியை திருடிவிட்டு தப்பிச் சென்ற இரண்டு திருடர்களை பிடித்து விசாரணை செய்ததில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அய்யனார்குளத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜேஷ் (24) மற்றும் இளையான்குடி சொக்கப்படப்பூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அன்புமணி (32) என தெரியவந்தது.

பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து திருச்சி ஜேஎம் 3 குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி துறையூர் கிளைச் சிறைச்சாலையில் அடைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC