திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மோதி காவலர் சம்பவ இடத்திலேயே பலி - போலீசார் விசாரணை
Accident

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் ரியாஸ் முகமது (35). இவர் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் நம்பர் ஒன் டோல்கேட் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ரியாஸ் முகமது பனமங்கலம் அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்சியில் இருந்து சமயபுரம் நோக்கி ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (31) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ரியாஸ் முகமது மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த ரியாஸ் முகமது உடலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சமயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து ரியாஸ் முகமது உடலை கைப்பற்றிய கொள்ளிடம் காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் காவல் உதவி ஆய்வாளர் சேவியர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.....