வார்டு உறுப்பினர் பதவி ஏலம்: திருச்சி தொட்டியம் அருகே பரபரப்பு:
தமிழகத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்துள்ளது. இதற்காக விண்ணப்ப மனுக்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவினை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா, அரசலூர் ஊராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்வதற்காக மாரியம்மன் கோயிலில் நேக இரவு நேரத்தில் கூட்டம் நடைபெற்றது .
அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
தொட்டியம் தாலுக்கா அரசூர் கிராமத்தில் நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மாரியம்மன் கோவிலில் இரவு நேரத்தில் ஏலம் நடைபெற்றது .இந்த ஏலத்தில் அதிக தொகை கொடுப்பவர்களுக்கு வார்டு உறுப்பினர் பதவி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 1 லட்சம் ரூபாய் கொடுத்து வார்டு உறுப்பினர் பதவியை ஏலம் எடுத்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததால் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏலத்தில் ஈடுபட்டவர்களை ஜனநாயக விதிமுறைக்கு முரணாக செயல்படக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.