திருச்சி சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான் – பிஷப் ஹீபர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: உய்யக்கொண்டானை காக்க மேலும் ஓர் முயற்சி:
திருச்சி மலைக்கோட்டை எப்படியோ அதுபோலவே உய்யக்கொண்டான் ஆறும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆறு நீண்ட வரலாற்றையும் தனிச் சிறப்பையும் பெற்றது.
சுமார் 1000 ஆண்டுகளை கடந்து இன்றளவும் திருச்சியின் மையப்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்றைய தொழில்நுட்பங்களோடு கட்டப்பட்ட இந்த ஆறு சுமார் 8 கிலோமீட்டர் வரை திருச்சியை கடந்து செல்கிறது. இந்த கால்வாயால் விவசாயிகளுக்கு சுமார் 32,742 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறுகின்றன.
காலத்தின் மாற்றத்தாலும் நாகரீக வளர்ச்சியினாலும் திருச்சியின் கழிவுகளே இதில் கலக்கும் கவலை நிலையையே உண்டாக்கி உள்ளது. முப்போகம் விளையும் கால்வாயில் இப்போது மூக்கை மூடி கடக்கும் அவல நிலை உண்டாகி உள்ளது.
இந்த அவலநிலையை போக்கவே திருச்சி “சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான்” மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். பிஷப் ஹீபர் கல்லூரியின் என்விரான்மென்டல் சயின்ஸ் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு தங்களுடைய ஆராய்ச்சிகளை உய்யக்கொண்டான் மூலம் “எப்படி தண்ணீரை சுத்தம் செய்வது தண்ணீர் மேலாண்மை, மறுசீரமைப்பு செய்வது” போன்ற ஆய்வுகளை செய்ய இந்த ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதுகுறித்து பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பால்தயாபரன் கூறும்போது ” ராஜாக்களின் காலத்தில் எப்படி ஓடியதோ அதேபோலவே இப்போதும் இந்த ஆறு ஓடவேண்டும் என்பது என் ஆசை. காலத்தின் மாற்றத்தால் ஆங்காங்கே அசுத்தமடைந்தாளும் மக்கள் குப்பைகளை கொட்டாமல் இருக்க வேண்டும்” என கூறினார்.
என்விரான்மென்டல் சயின்ஸ் இரவிச்சந்திரன் அவர்கள் கூறும்போது “வருங்கால வாழ்க்கை என்பது மிகவும் முக்கியம்.எனவே நம்முடைய வருங்கால வாழ்க்கையை நினைத்து ஆற்றினை அசுத்தம் செய்யமால் இருப்போம்” என்றார்.
சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான் குழுவிலிருந்து மருத்துவர். நரசிம்ம ராவ் கூறும்போது
“திருச்சியில் தன்னார்வலர்கள் வயது வித்தியாசம் பாராமல் சிறுவர் முதல் பெரியோர் வரை வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 8.30 வரை உய்யக்கொண்டானுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அங்குள்ள குப்பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் அகற்றிவருகின்றனர். இது 95 வாரங்கள் நிறைவுற்று 100 வது வாரத்தை நோக்கி நகர்கிறோம்.
“என் நகரம் என் கடைமை” என்பதை மக்கள் மனதில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களையும் வீட்டின் கழிவுகளையும் உய்யக்கொண்டானில் கலப்பதை நிறுத்த வேண்டும். “அசுத்தம் செய்பவர்கள் இல்லை என்றால் சுத்தம் செய்பவர்கள் தேவையில்லை”என்றார்.
மேலும் இக்கூட்டத்தில் பிஷப் ஹீபர் கல்லூரியில் என்விரான்மென்டல் சயின்ஸ் தலைவர் அழகப்பா மோசஸ் சிட்டிசன் பார் உய்யக்கொண்டான் குழுவிலிருந்து விஜயகுமார், மகேஷ் கண்ணா, ஹேமலதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.