குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம்
திருச்சி மாவட்டம் முசிரி தாலுக்கா பேரூர் ஊராட்சியில் தட்டுப்பாடற்ற வகையில் குடிநீர் வழங்க வேண்டும் ஏழு நாட்களுக்கு ஒரு முறை ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குவதை கண்டித்தும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிரி ஒன்றியம் பேரூர் கிராமத்தில் காவிரி குடிநீர் வாரம் ஒருமுறை வழங்கப்படுவதாகவும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிரி ஒன்றிய ஆணையர் ராஜ்மோகன்,காவிரி கூட்டு குடிநீர் வழங்கல் துறை இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கிராமத்திற்கு நேரில் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதை ஏற்று கொள்ளாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயரதிகாரிகள் வந்து தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து முசிரி வட்டாட்சியர் பொறுப்பு புஷ்பராணி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி ஆகியோர் சம்பவ இடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO