திருச்சியில் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

திருச்சியில் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கூட்டுறவு சார்பதிவாளர் பீட்டர் லீளேனார்ட் தலைமையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர வேல் உள்ளிட்ட பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பெரிய கடைவீதி கிலேதார்தெருவில் TN81C 2998 என்ற எண் கொண்ட   வெள்ளை நிற ஸ்கார்பியோ காரை சோதனை செய்தனர். அதில் கார் ஓட்டுநர் சுரேந்தர், நகை கடை விற்பனையாளர் வினோத், நகை கடை சூப்பர்வைசர் கார்த்திக் ஆகிய மூவரும் காரில் இருந்துள்ளனர்.

பின்னர் காரை சோதனை செய்தபோது காருக்குள்ளே இரண்டு சில்வர் பெட்டிகள் இருந்துள்ளன. அவற்றை திறந்து பார்த்தபோது 5 கிலோ 961 கிராம் ஆபரண நகைகள் இருந்துள்ளது. இதன் மதிப்பு 2 கோடியே 52 லட்சமாகும்.இதுகுறித்து பறக்கும் படையினர் மூன்று பேரிடம் விசாரித்த போது உரிய ஆவணம் இல்லாமல் நகைகளை கொண்டுவந்தது தெரியவந்தது.

இவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும்  மாநகராட்சி உதவி ஆணையருமான  கமலக்கண்ணனிடம் ஒப்படைத்தனர்.காரில் வந்த 3 பேரும் எங்கிருந்து இந்த நகையை கொண்டு வந்தார்கள். எங்கு கொண்டு செல்கிறார்கள். நகைகளை எதற்காக கொண்டு செல்கிறார் என்ற கோணத்திலும் மூன்றுபேரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

பிடிபட்ட நகைகள் அனைத்தும் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, கமலக்கண்ணன் முன்னிலையில் சரி பார்க்கப்பட்டு, சீல் வைத்து, ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி உத்தரவின் படி ,நகைகளை அரசு கருவூலத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நகைகள் திருச்சியின் பிரபல நகை கடையான மங்கள் &மங்கள்க்கு சொந்தமானது என்றும், கடையில் விற்பனை  தேவைக்காக கொண்டுவரப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81