உணவுத்துறையை அலறவிட்ட அதிகாரி, மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு

உணவுத்துறையை அலறவிட்ட அதிகாரி, மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணிபுரிபவர் டாக்டர் ரமேஷ்பாபு. இவரது மனைவி சர்மிளா. 2002ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் நாகாதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் சேர்ந்த டாக்டர் ரமேஷ்பாபு, உணவு பாதுகாப்பு துறையில் திருவாரூர் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி இப்போது திருச்சியில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சர்மிளா குடும்ப தலைவியாக மட்டும் இருந்து வருகிறார். டாக்டர் ரமேஷ்பாபு மற்றும் சர்மிளா இருவர் பெயரிலும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கியுள்ளதாக கிடைத்த தகவல் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். (01.04.2018)ம் ஆண்டு முதல் (31.12.2021)ம் ஆண்டு வரை குறியீட்டு காலமாக கொண்டு விசாரணை நடத்தப்பட்டது.

(01.04.2018)க்கு முன் ரமேஷ்பாபு, சர்மிளா இருவர் பெயரிலும் இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.18,64,428. ஆனால் (31.12.2021) வரை ரமேஷ்பாபு, சர்மிளா பெயரில் சேர்ந்துள்ள அசையும், அசையா சொத்துக்கள், சேமிப்பு கணக்குகளில் வைத்துள்ள தொகைகள், வாகனங்களின் மதிப்பு ரூ.2,36,60,294. குறியீட்டு காலத்தில் ரமேஷ்பாபுவுக்கு கிடைக்க பெற்ற மாத சம்பளம், மனைவி பெயரில் வங்கியில் பெற்ற கடன், வாகன விற்பனை மூலம் கிடைத்த தொகை, வாடகை மூலம் பெற்ற வருமானம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.1,54,20,796.

குறியீட்டு காலத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட மொத்த செலவு ரூ.79,18,713. ரமேஷ்பாபு, சர்மிளா இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.1,42,93,783. அரசு ஊழியரான டாக்டர் ரமேஷ்பாபு, அவரது மனைவி சர்மிளா இருவர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்தக்கள் வாங்கி குவித்திருப்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision