55 வருடங்களுக்கு பிறகு பழங்கால பாரம்பரிய முறைப்படி நிரம்பிய ஆதி தீர்த்த குளம்!!
கோவில்களின் நகரமான திருச்சியில் உள்ள பல வருடங்கள் வரலாறு நிறைந்த கோவிலில் முக்கியமானது பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவிலாகும். இங்கு இரண்டு முக்கிய தீர்த்த குளங்கள் உள்ளது.
20,600 சதுரடியில், 15 அடி ஆழத்தில் ஆதி தீர்த்த குளத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே காவேரி ஆற்றில் இருந்து ஸ்ரீரங்கம் வழியாக செல்ல கூடிய திருமஞ்சன காவேரி என்று கூற கூடிய மலட்டாறு கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்பப்படும். இதற்கு பழங்கால முறையான குமிழி தும்பு முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 55 வருடங்களாக மலட்டாறு கால்வாயில் இருந்து தீர்த்த குளத்திற்கு வரும் வழி அடைக்கப்பட்டது.
இதனால் குளத்திற்கான நீர் ஆதாரம் தடைபட்டு திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் ஐந்து பெரிய போர்வெல்கள் மூலம் நிலத்தடி நீர் எடுத்து குளத்தில் விட்டு வந்தனர். ஒருமுறை குளத்திற்கு 85 லட்சம் லிட்டர் நீர் நிரப்புவதற்கு குறைந்தபட்சம் 20 நாட்களும், மாத பராமரிப்பிற்கு என இருபதாயிரத்திற்கு மேல் பணமும் செலவு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பாரம்பரிய முறைப்படி மலட்டாறு வாய்களில் இருந்து குளத்திற்கு நீர் எடுத்து நிரப்புவது சாத்தியமற்ற செயல் என ஆராய்ச்சி செய்தவர்கள் தெரிவித்த பட்சத்தில், திருச்சி மாநகராட்சி மற்றும் இந்துசமய அறநிலைய துறையினர் இணைந்து இதற்கான சிறப்பு ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் வாய்க்காலில் இருந்து ஆதி தீர்த்தம் தொட்டியை நிரப்புவதற்காக 300மிமீ விட்டத்தில் சுமார் 520 மீட்டருக்கு பைப்லைன்கள் அமைக்க கடந்த ஆண்டு திட்டமிட்டனர்.
அதனடிப்படையில் மக்கள் பங்களிப்புத் திட்டமான நமக்கு நாமம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நன்கொடைகள் உட்பட ரூ.48 லட்சத்தில் காவேரி நீரை கொண்டு செல்லும் குழாய் அமைப்பு கட்டி முடிக்கப்பட்டது. கோடைகாலத்தில் வாய்க்காலில் இருந்தே போர் மூலம் நீர் எடுத்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதியினால் 55 வருடங்களுக்கு பிறகு காவேரி நீரால் திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஆதி தீர்த்த குளம் நிரம்பியிருப்பது பக்தர்களுக்கும், பொதுமக்களும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision