வடகிழக்கு பருவமழை - விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல்.

வடகிழக்கு பருவமழை - விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல்.

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில் விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும். மா, கொய்யா மற்றும் இதர பழப்பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி கவாத்து செய்வதன்மூலம் மரத்தின் சுமையை குறைத்து மழை மற்றும் புயல் காற்றில் இருந்து பாதுகாக்கலாம். 

மழை நீர் தேங்க வாய்ப்புள்ள நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வசதி செய்து மழைநீர் வெளியேறிய பின்னர் அடி உரமிட்டு மரத்தை சுற்றி மண் அணைத்தல் வேண்டும். காய்கறி பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும். இலைவழி உரமளித்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்தல் வேண்டும். குச்சி பந்தல் அமைத்து கொடிவகை காய்கறி பயிர் செய்வோர் மண் அணைத்தும், வலுவிழந்த பகுதிகளில் கூடுதல் ஊன்று கோல்கள் அமைத்து பந்தல் சாய்வதை தடுத்திட வேண்டும்.

அதிக அளவில் பயிரிடப்படும் வாழை பயிர்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புகளை பயன்படுத்தி ஊன்று கோல் அமைத்திட வேண்டும். பசுமைக்குடில் மற்றும் நிழல்வலை கூடாரத்தின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பசுமைக்குடிலின் உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதிகள் இல்லாததை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பசுமைக்குடிலின் கட்டுமானத்திலுள்ள கிளிப்புகளை மாற்ற வேண்டும். பசுமைக்குடில் அருகில் பட்டுப்போன, காய்ந்து போன மரங்கள் மற்றும் கிளைகள் இருப்பின் அவற்றை கவாத்து செய்து பசுமைக்குடிலை பாதிக்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க பசுமை குடிலினை சுற்றி உயிர் வேலி அமைத்திட வேண்டும். இத்தகவல் அனைத்தும் விவசாயிகள் கடைப்பிடித்து பயன்பெற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision