கடைகளை பாதுகாக்க இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காந்தி மார்க்கெட் வியாபாரிகள்
திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொது ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் திறக்கப்படாத நிலையில், கடையில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வியாபாரிகள் தொடர்ந்து பத்து நாட்களாக இரவு நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காந்தி மார்க்கெட்டில் 85 மளிகை கடைகள் உள்ளன. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அப்படியே கடையின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மர்மநபர்களால் பொருள்கள் எதுவும் திருடு போகாத வண்ணம் காப்பதற்காக வியாபாரிகள் பத்து பேர் சேர்ந்த குழுவாக இரவு நேரத்தில் கடைகளை கண்காணித்து வருகின்றனர். காந்தி மார்க்கெட் மளிகை கடை சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் இந்த குழு செயல்படுகிறது.
இதுகுறித்து பரங்கிகாய் பூசணி வியாபாரியான ராமச்சந்திரன் கூறுகையில்.... 2020இல் இதேபோன்று பொது ஊரடங்கு போடப்பட்ட போது கடைகளை விட்டு நாங்கள் சென்ற பின்பு கடைகளில் மர்ம நபர்களால் பல பொருட்கள் திருடு போயின. வியாபாரிகளுக்கு இதனால் ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. கடையில் இருக்கும் தராசு, கல்லாபெட்டி, இரும்பு பொருட்கள், பேட்டரி போன்ற அனைத்தையும் திருடி சென்றனர். இதனை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு நாங்களே பாதுகாப்பில் ஈடுபடலாம் என்று காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் விண்ணப்பித்தோம்.
இதற்கு காவல்துறையினர் ஒப்புதல் அளித்து எங்களோடு இணைந்து மூன்று காவலர்கள் காந்தி மார்க்கெட்டில் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது 10 பேர் கொண்ட குழு இரவு நேரத்தில் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், வரும் வாரங்களில் பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுமாயின் பகல் நேரங்களிலும் கடைகளை பாதுகாப்பதற்கான குழுவை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளோம் என்கிறார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx