ஊரடங்கில் மதுவிற்பனை - போலீசாரை பார்த்ததும் பாட்டிலை போட்டுவிட்டு ஓட்டம்!
இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் குடிமகன்களுக்கு மது விநியோகம் செய்வதற்கென்றே, சிலர் மொத்தமாக நேற்றே சரக்கு பாட்டில்களை வாங்கி வைத்து, இன்று அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி பிராட்டியூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் சென்றனர்.
போலீஸ் வருவதை பார்த்த உடனேயே சரக்கு பாட்டில்களை அப்படியே விட்டுவிட்டு விற்றுக் கொண்டு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர்.
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.