வீட்டை விட்டு வெளியேறிய கர்ப்பிணி - மருத்துவம் பார்க்க மறுத்த துவாக்குடி அரசு மருத்துவமனை!!
தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் சேர்ந்தவர் ஷாகுல்.லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெமினா. நிறைமாத கர்ப்பிணியான இவர் அவரது தாய் வீடு கேகே நகரில் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 09.30 மணியளவில் மன அழுத்தம் காரணமாக திருச்சி கே. கே நகரில் இருந்து வீட்டை விட்டு வெளியே தனியாக தஞ்சாவூர் சாலையில் நடந்து சென்றிருக்கிறார். அப்போது லிப்ட் கேட்டு சென்ற போது மெதுவாக செல் என்றதற்கு அந்த பெண்ணை BHEL கணேசா அருகில் வண்டியிலிருந்து வேகமாக கீழே தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
கீழே விழுந்ததில் அந்த பெண்ணிற்கு முகத்தில்,வயிற்றில் பலத்த அடிபட்டு கொட்டும் மழையில் ரோட்டில் அமர்ந்திருந்த பெண்ணை இரவு ரோந்து பணிக்கு அந்த வழியில் வந்த திருவெறும்பூர் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் அந்த பெண்ணை 108க்கு போன் செய்து துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.அங்கு இரவு பணியில் இருந்த ஒரு மருத்துவர் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறி அந்த பெண்ணை கொட்டும் மழையில் துரத்தி விட்டுள்ளனர்.
அந்த பெண்ணும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து நடு ரோட்டில் அமர்ந்து விட்டார். அதன் பின் அந்த வழியில் ரோந்து வந்த துவாக்குடி காவல் ஆய்வாளர் காந்திமதி அவர்கள் அந்த பெண்ணை மீட்க அருகே சென்ற போது காவல் உடையை பார்த்து பயந்து கத்தியதால் உடனே காவல் ஆய்வாளர் தன்னார்வலர்கள் அனிலா மற்றும் வாழவந்தான் கோட்டையைச் சேர்ந்த எமிலினாவிற்கும் போன் செய்து உடனே துவாக்குடி பஸ் நிலையம் அருகே வர சொல்லியுள்ளார் ஆய்வாளர் காந்திமதி.
பின் தன்னார்வலர்கள் அந்த இடத்திற்கு வந்து அந்த பெண்ணுடன் பேச்சு கொடுத்து சாப்பாடு வாங்கி சாப்பிட வைத்து வேறு உடையை மாற்றி விட்டு, அந்த பெண்ணின் கணவரின் விவரம் கைபேசி எண்ணை வாங்கி அவர் வரும் வரை அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துக் கொண்டு பாதுகாத்து அந்த பெண்ணின் கணவர் ஷாகுல் வந்த உடன் அந்த பெண்ணை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
துவாக்குடி காவல் ஆய்வாளர் மற்றும் தன்னார்வலர்கள் அனிலா, எமிலியா,சாருமதி ஆகியோர் மீண்டும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்குள்ள மருத்துவர் அந்த பெண்ணிற்கு முதல் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார். அந்தப் பெண் செய்த குறும்புகளை படம் பிடித்து அவருடைய கணவர் ஷாகுலிடம் காட்டியுள்ளனர் மருத்துவர்கள்.
மருத்துவர்களிடம் விவாதம் செய்து அங்கிருந்த செவிலியர் அந்தப் பெண்ணின் கருவில் உள்ள குழந்தையின் துடிப்பு உள்ளதா என்று பரிசோதித்த போது துடிப்பு இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளனர். ஸ்கேன் எடுத்துப் பாருங்கள் என்று கூறியவுடன் ஸ்கேன் வசதி இல்லை என கூறியுள்ளனர்.பின் அல்ட்ரா ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைவாக உள்ளதால் ஆரம்ப கட்ட சிகிச்சை அளித்து இரவு 11.40 மணிக்கு அந்தப் பெண்ணை கணவருடன் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.