தைப்பூசம் கொண்டாட்டம் - களைகட்டிய திருச்சி வயலூர் முருகன் கோவில்!!

தைப்பூசம் கொண்டாட்டம் - களைகட்டிய திருச்சி வயலூர் முருகன் கோவில்!!

Advertisement

திருச்சியை அடுத்த குமாரவயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசவிழா இன்று களைகட்டியது. விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்னர், முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன.

Advertisement

தமிழக அரசு ஏற்கனவே தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்கும் பொதுமக்களை கோவிலுக்குள் அனுமதித்தனர். முக கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இன்று 12 மணியளவில் அபிஷேக ஆராதனையைத் தொடர்ந்து 1 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவர் முத்துகுமாரசுவாமி புறப்பட்டு உய்யகொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் அதவத்தூர் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Advertisement

இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வழியாக வரகாந்திடலை இரவு 10 மணிக்கு அடைகிறார். அங்கு மண்டகப்படி பெற்று கீழ வயலூர் தைப்பூச மண்டபத்திற்கு இரவு 11 மணிக்கு வந்தடைகிறார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்று நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு வடகாபுத்தூர் கிராமம் வந்தடைகிறார். நாளை காலை 8.30 மணிக்கு வடகாபுத்தூரில் இருந்து புறப்பட்டு உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் சுவாமி, அல்லித்துறை பார்வதீஸ்வரர் சுவாமி, சோழங்கநல்லூர் காசி விஸ்வநாத சுவாமி, சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

Advertisement

தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் வருவதற்காக திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வயலூர் முருகன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதலே பொதுமக்கள் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டு வருவதால் வயலூர் பகுதி முழுவதும் களைகட்டி காணப்பட்டு வருகிறது.