திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
திருச்சிராப்பள்ளி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50) என்பவர் நேற்று முன்தினம்
20.11.2021-ம் தேதி இரவு ரோந்து பணியின் போது பூலாங்குடி காலணி என்ற இடத்தில்
வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று
நபர்கள் ஆடுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு வந்தவர்களை,
சந்தேகத்தின் பேரில் மேற்படி சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் தலைமைக் காவலர் சித்திரைவேல் ஆகியோர் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்த போது, அவர்கள் மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து மேற்படி நபர்களை பிடிக்க பின் தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளரும் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது கீரனூர் காவல் சரகத்திற்குட்பட்ட பள்ளத்துப்பட்டி, மணிவிஜய் நகர் ரயில்வே பாலம் அருகில் சிறப்பு உதவி ஆய்வாளர் மேற்படி மூன்று எதிரிகளையும் மடக்கி பிடித்து விசாரித்துக் கொண்டிருந்த போது அதில் 19 வயது நிரம்பிய மணிகண்டன் மற்றும் அவனுடன் வந்த இரு இளஞ்சிறார்களும் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இது தொடர்பாக தகவல் கேள்விப்பட்டு வந்த மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் சம்பவ இடம் வந்து பார்த்த போது பூமிநாதன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் காவல் நிலைய குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் உத்தரவுப்படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆலோசனையில் திருச்சி காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றம் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்ட மேற்படி தனிப்படையினர் கொலையாளி மணிகண்டன் (19) மற்றும் இரண்டு இளஞ்சிறார்களை கைது செய்துள்ளனர். மேற்படி குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn