கொரோனாவில் மீண்டு வரும் திருச்சி! ஒரே நாளில் 32 பேர் டிஸ்சார்ஜ்!!
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 32 பேர் இன்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, அனைவருக்கும் பழ வகைகளை வழங்கி வாழ்த்தி வழியனுப்பினார். மருத்துவக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேர், ஈரோடு, பெரம்பலூர், அரிலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இவர்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பூரண குணமடைந்து கடந்த 10ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மீதமுள்ளவர்களில் 32 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தொடர் மருத்துவப் பரிசோதனையில் செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் 24 மணிநேரத்துக்கு புதன்கிழமை முழுவதும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பபட்டனர்.
இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர், பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்துள்ளனர். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.