சாவை தொட்ட முதியவருக்கு உயிர்கொடுத்த திருச்சி காவலர்:
ஆபாச படங்களையும் அடுத்தவர் குடும்பத்திற்கு வேட்டுவைக்கும் நிகழ்வுகளே பெரும்பாலும் டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
ஆனால் இப்போது டிக் டாக் செயலியில் காவலர் ஒருவரின் மனிதாபிமானம் பதிவேற்றம் செய்யப்பட்டு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
யார் இவர்?
திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பிரபு.
கடந்த மாதம் 6ஆம் தேதி இரவு வண்ணான் கோயில் பகுதியில் மனைவி மற்றும் பேரனுடன் டூவீலரில் வந்த முதியவர் மீது ஜீப் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்க்கும் பொழுது முதியவர் மட்டும் உடல் அசைவு இல்லாமல் இருந்துள்ளார். அவர் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்திருந்தனர். அந்த நேரத்தில் ரோந்து பணியில் அப்பகுதி வழியாக வந்த ராம்ஜி நகர் போலீசார் பிரபு அசைவில்லாமல் கிடந்த முதியவருக்கு நாடித்துடிப்பு இருப்பதை உறுதி செய்து, உடனே அவருக்கு செயற்கை சுவாசம் அழைத்து காப்பாற்ற முயற்சி செய்தார். அதன் பலனாக சிறிது நேரத்தில் முதியவர் கண் விழித்தார். இறந்து விட்டதாக எண்ணியிருந்த முதியவரை முதலுதவி செய்து காப்பாற்றிய காவலர் பிரபுவின் வீடியோ தற்போது டிக்டாக்கில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சாவின் விளிம்பில் இருந்த முதியவரை காப்பாற்றிய காவலர் பிரபுவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.