அமைச்சர் கையை கொட்டிய தேனீ -  கைகுட்டையால் விரட்டியடித்த ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ

அமைச்சர் கையை கொட்டிய தேனீ -  கைகுட்டையால் விரட்டியடித்த ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பு, நாட்டுக்கோழிகள் வளர்ப்பு, மீன்கள் வளர்ப்பு, காய்கறித் தோட்டம் அமைத்தல், காளான் பண்ணை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்த்தல், மாட்டுத்தீவனச் செடிகள் பயிரிடுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பார்வையிட்டு சிறந்த முறையில் பண்ணையத்தினைப் பராமரித்திட ஆலோசனைகளை வழங்கினார். 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், செ.ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் தேனீ வளர்ப்பு குறித்து அமைச்சர் கே.என்.நேரு அதிகாரியிடம் கேட்டறிந்தார். பின்னர் அந்த தேனீ வளர்க்கும் பெட்டியை வெளியில் எடுத்து அதிகாரிகளிடம் கொடுத்தார். அப்பொழுது தேனீ கூட்டில் இருந்த தேனீக்கள் அமைச்சர் கையை கொட்டியது. உடனே பதறி அடித்து அமைச்சர் கே.என்.நேரு அங்கிருந்து சென்றார். தேனீ கூடு கலைந்ததால் அமைச்சர் பின்னே சென்றவர்களையும் தேனீக்கள் கொட்டியது.

பின்னர் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்ற அமைச்சர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். அப்போது அந்தப் பகுதியில் தேனீக்கள் வந்ததால் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தனது கை குட்டையை வைத்து தேனீக்களை விரட்டினார். இந்த நிகழ்வால் அங்கு கூடியிருந்தவர்கள் தேனீ கொட்டிய வலியை பொறுத்துக் கொண்டு சிரித்துக்கொண்டே இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO