இழப்பீடு வழங்காததால் வைகை எக்ஸ்பிரஸ் இரயில் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் வைகை எக்ஸ்பிரஸ் இரயில் ஜப்தி

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் கடந்த 2003 பிப்ரவரி மாதம் 5ம் தேதி அரியலூர் செல்வதற்காக சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். ரயில்  ஒரு டிராக்டர் மீது மோதியதில் விக்கிரவாண்டி அருகே விபத்து ஏற்பட்டது. ரயிலில் இருந்த பழனிவேல் படுகாயமடைந்தால் விழுப்புரத்தில் மற்றும் புதுச்சேரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் விபத்தில் அவர் நிரந்தர ஊனம் ஆனார்.

இதனை தொடர்ந்து தனக்கு இழப்பீடு வழங்க கோரி ரூபாய் 7 லட்சம் கேட்டு திருச்சி மூன்றாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் வழக்கை தொடர்ந்தார். இவ்வழக்கில் டிராக்டர் உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இத்தீர்ப்பை எதிர்த்து பழனிவேல் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் பழனிவேலுக்கு ரயில்வே நிர்வாகம் 2  1/2 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் ரயில்வே நிர்வாகம் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்கவில்லை எனவே தன்னுடைய வழக்கறிஞர் மூலம் நிறைவேற்றுதல் மனுவை திருச்சி மூன்றாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். நீதிபதி விவேகானந்தன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. ரெயில்வே இலாகா சார்பில் ஆஜராகி அதிகாரிகள் இழப்பீடு தொகையில் 60% செலுத்தி விட்டு மீதி தொகையை வழங்காமல் கொரானா உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் முன் வைத்தனர். இந்நிலையில் பழனிவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில்குமார் ரயில்வே நிர்வாகம் இழப்பீடு தொகையை மனுதாரருக்கு வழங்காமல் இழுத்தடித்து வருவதால் விபத்தை ஏற்படுத்திய வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் முதல் கார்டு வரையிலான அனைத்து பெட்டிகளையும் ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார். நீதிபதி விவேகானந்தன் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்டு நேற்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

இது தொடர்பாக இந்த வழக்கில் ஆஜரான வக்கீல் செந்தில்குமார் கூறுகையில்... பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தொடரப்பட்ட இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு அடிப்படையில் கோர்ட்டில் தொகை செலுத்தி தமிழ்நாடு உதவியுடன் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து மதுரை செல்லும் போது அல்லது மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது திருச்சியில் ஜப்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu