தேர்தல் பிரசார அடாவடிகள்… காற்றில் பறக்கும் விதிகள்… கண்டுகொள்ளாத காவல்துறை…

தேர்தல் பிரசார அடாவடிகள்… காற்றில் பறக்கும் விதிகள்… கண்டுகொள்ளாத காவல்துறை…

சாதாரண நாட்களிலேயே கரைவேட்டிகளைக் கண்டால் சலாம் போட்டுப் பழகியவர்கள் நமது காவல்துறையினர். தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், என்ன செய்வதென்று தெரியாததால், எதையுமே செய்வதில்லை என முடிவெடுத்துவிட்டது போல் தெரிகிறது. 

அரசியல் கட்சியினரின் பிரசாரங்களின்போது விதிமீறல்கள் எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருகிறது திருச்சி மாநகர காவல்துறை. ஏராளமான இருசக்கர வாகனங்களில் பிரசாரத்தில் ஈடுபடுவோர் யாரும் ஹெல்மெட் அணிவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் கட்சிக் கொடிகளையும், சின்னங்களையும் நிறங்களையும் தாங்கி ஊர்வலமாகச் செல்வது காவலர்களின் கண்களில் படுவதேயில்லை.

ஒரு வாகனத்தில் இத்தனை பேர்தான் செல்லவேண்டும் என வரைமுறை ஏதுமின்றி, வண்டியின் இழுதிறனைப் பொறுத்து, எத்தனை பேர் வேண்டுமானாலும் ஏறிக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபடுவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக, மார்க்கெட் போன்ற பகுதிகளிலும் காவல்துறையினர் புடைசூழ பிரசாரம் வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சியினரும் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்க விட்டுக்கொண்டு படு சுதந்திரமாக பவனி வருகின்றனர். 

அதேசமயம், சாமானியன் யாராவது ஹெல்மெட் அணியாமலோ, சீட் பெல்ட் அணியாமலோ வந்தால் அவ்வளவுதான், காவல்துறையின் கடமை உணர்வு கட்டுக்கடங்காமல் போய்விடுகிறது. ஒரு தீவிரவாதியைக் கையாள்வது போல் அந்தச் சாமானியனைக் கையாள்கிறது நமது கடமை தவறாத காவல்துறை. கரைவேட்டி கட்டியவர்களுக்கு ஒரு நீதி, சாமானியர்களுக்கு ஒரு நீதி என்பதுதான் திருச்சி மாநகரக் காவல்துறையினரின் தனி நீதியாக இருக்கிறது. இதை யாரிடம் போய்ச் சொல்லி நியாயம் கேட்பது எனப் புலம்பி வருகின்றனர் சட்டம் ஒழுங்கில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision