இயற்கை விவசாயத்திற்காக களை எடுக்கும் கருவியை கண்டுபிடித்த அரசு பள்ளி ஆசிரியர்

இயற்கை விவசாயத்திற்காக களை எடுக்கும் கருவியை கண்டுபிடித்த அரசு பள்ளி ஆசிரியர்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் ஓவிய ஆசிரியர் குணசேகரன். விவசாயத்தின் மீது உள்ள ஆர்வத்தால் களை எடுக்கும் கருவி உள்ளிட்ட பல விவசாய கருவிகளை இயந்திரம் இல்லாமல் தனிநபரே சுலபமாக உபயோகிக்கும் விதமாக கண்டுபிடித்துள்ளார் .இதுகுறித்து ஆசிரியர் குணசேகரன் அவர்களிடம்  கேட்டபோது ..........சிறு வயதிலிருந்தே விவசாயம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் பள்ளி ஆசிரியரான பிறகும் இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் மற்றும் பல சிறு சிறு வேலைகளை செய்து வந்தேன் எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. விவசாயத்தின் மீது உள்ள ஆர்வத்தால் இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்தி வருகிறேன்.


காய்கறிகள், பயிறு வகைகளுக்கு இடையே அதிகமாக களைகள் வளருகிறது அதனால் லாபம் குறைகிறது . களைகளை எத்தனை ஆட்களைகொண்டு எடுத்தாலும் களைகளை கட்டுப்படுத்த மிகவும் சிரமமாக இருந்தது. இதுகுறித்து வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட  நிலைய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பயிற்சி உதவியாளர்கள் அளித்த ஊக்கத்தின் பேரில் நெற்பயிரில் களை எடுக்க உதவும் கருவியை கண்டுபிடிக்க முயற்சித்தேன். மேலும் தோட்டக்கலைப் பயிர்களில் களை எடுக்கும் கருவியை கண்டுபிடிக்க எனக்கு ஊக்கம் அளித்தனர்.

ஓவிய ஆசிரியர் என்பதால் இது போன்ற கருவிகளை வடிவமைப்பதற்கு முதலில் வரைபடங்களை வரைந்து முயற்சித்தபோது இதனை எப்படி செயலாக்கம் செய்யலாம் என்பது குறித்து அவர்கள் அளித்த ஊக்கமும் பெரிதும் உதவியது .

 நமது வீட்டில் பண்ணையில் கிடைக்கும் பழைய இரும்பு சாமான்கள் பழைய சைக்கிள் சக்கரத்தை வைத்து கையால் இயக்கும் களையெடுக்கும் கருவிகளை கண்டுபிடித்தேன். மனித சக்தியில் இயங்கும் வகையில் இந்த கருவிகள்  வடிவமைக்கப்பட்டுள்ளது.குறைந்த இடைவெளி கொண்ட தோட்டக்கலை பயிர்களுக்கு இடையே உள்ள களைகளை வேரோடு அகற்றும் வகையில் இந்த கருவி செயல்படுகிறது. மேலும் களை எடுக்கும் பணி உழுது செய்தல் போன்ற பணிகளை செய்ய தேவையான கருவியை  இணைக்க முடியும்.


 வேலையாட்களை வைத்து களை எடுக்கும் போது 50 பேர் வரை தேவைப்படும் .இந்த கருவி மூலம் களை எடுக்க 15 முதல் 18 வேலையாட்கள் போதுமானது .இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 4000 முதல் 4600 வரை வேலையாட்கள் சம்பளம் மிச்சப்படுகிறது.கருவி இயங்கும் திறன் அதிகளவில் உள்ளதால் களை எடுக்கும் செலவு வெகுவாக குறைகிறது.இந்த கருவியை மேம்படுத்த அரசாங்கம் உதவினால் இதுபோன்ற கருவியை பல்வேறு பணிகளுக்கும் உபயோகிக்கும் வகையில் உருவாக்க முடியும் என்றார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon